தடங்கள்

The Reluctant fundamentalist ஜனவரி 3, 2016

Filed under: Uncategorized — bashakavithaigal @ 12:55 பிப

“Excuse me, sir,but may i be of assistance? Ah, i see i have alarmed you. Do not be frightened by my beard. I am a lover of America”
அட்டகாசமான வரிகளுடன் ஆரம்பிக்கிறது நாவல். நாவலின் நடை Dramatic monologue. லாகூரின் ஒரு உணவகத்தில் இரண்டு நபர்கள் உட்கார்ந்திருக்கிறார்கள். ஒரு நபர்(செங்கிஸ்) மட்டுமே நாவல் முழுவதும் பேசுகிறார் கூடவே எதிரே இருப்பவரை உபசரிக்கிறார் அவரை சௌகரியமாக வைக்க முயற்சிக்கிறார். பின் தன் 2001 காலகட்டத்தை சொல்ல தொடங்குகிறார். நாவலின் 2001-ல் செப் 11 இரட்டை கோபுர தாக்குதல் காலகட்டம். லிபரல் இஸ்லாமியரான செங்கிஸ் நியூயார்க் கனவுகளுடன் ஹாம்பர்க்கரும் மதுவுமாக அமெரிக்க காதலியுடன் டேட் போய் இஸ்லாமியர் பற்றிய பொதுவான நம்பிக்கைக்கு எதிர் துருவத்தில் இருக்கிறார். லாகூரில் அவரது குடும்பம் இருக்கிறது. நியூயார்க்கில் 18 வயதில் படிக்க ஆரம்பித்து 22 வயதில் மிகப்பெரிய நிறுவனத்தில் 80000 டாலர் சம்பளத்தில் வேலைக்கு சேர்ந்து அவரது கனவுகள் அந்த வயதுக்கேயுரிய அமெரிக்க ஆசைகளுடன் ஆரம்பிக்கிறது. இரட்டை கோபுர தாக்குதலுக்கு பிறகு அவரை பற்றிய அவரின் சக அமெரிக்கவாழ் மனிதர்களின் பார்வை மாற தொடங்குகிறது. அவரது காதலிக்கு அவளின் அகவயமான இன்டென்சிவ் காதல் சமீபத்தில் இறந்துபோன அவளின் சிறு வயது தோழனுடன் இருக்கிறது.பின் செங்கிஸ் உடனான தொடர்பால் குற்ற உணர்வு பாதிக்க மன நோய் அவளை தாக்குகிறது. அவளை காப்பாற்ற , நிறுவனத்தில் அடுத்தடுத்து போட்டிகளை சமாளிக்க,புதிதாக பார்க்கப்படும் தனது மாநிற தோலை குறித்த கவலைகள், இந்திய பார்லிமெண்ட் பாகிஸ்தான் தீவிரவாதிகளால் தாக்கப்பட்ட பிறகு இந்திய பாகிஸ்தான் போர் ஏற்படுத்த போகும் பாதிப்புகளையும் தனது குடும்பத்தின் பாதுகாப்பின்மை குறித்த கேள்வி குறியுடன் அல்லாடுகிறான் செங்கிஸ். சிலிக்கு பணி நிமித்தமாக செல்லும்போது அங்கிருக்கும் கிளையண்ட் அவனிடம் Janissaries குறித்து சொல்லி அவனது இருத்தலை கேள்விக்கு உட்படுத்துகிறார். பின் மிகப்பெரிய வாய்ப்புகளை தரும் வேலையை உதறிவிட்டு நாடு திரும்பிய ஜெங்கிஸ் அமெரிக்காவின் போலிதனங்களை கேள்விக்கு உட்படுத்துகிறான்.
நாவலின் முடிவில் எதிர்தரப்பு ஆசாமி பாக்கெட்டில் கை விடுகிறார். மெட்டல் ஒலி கேட்கிறது. அத்துடன் வாசகர் கற்பனைக்கு விட்டுவிட்டு நாவல் முடிகிறது.
நாவல் புலிட்சர் விருதிற்காக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது நாவல் படிக்கும்போது அமெரிக்காவிற்கு போக்குவரத்தாக போய்கொண்டிருந்த காலத்தில் எழுதிய சில கவிதைகள் நினைவுக்கு வருகிறது-:)
ஒரு பெயரில்
என்ன இருக்கலாம்
நான் நம்புவதாக
நம்பபடும் கடவுளும்
அதனால் புனையப்படும்
சித்திரங்களும்
ஒரு பெயரில்
என்ன இருக்கலாம்
மணமூட்டும் பிரியாணியும்
அதற்கான தருணங்களும்
ஒரு பெயரில்
என்ன இருக்கலாம்
வேறு எதனாலுமில்லாமல்
மறுமையில் சொர்க்கத்திற்காய்
திணிக்கப்படும் கருத்துகளும்
போலி புன்னகையும்
ஒரு பெயரில்
என்ன இருக்கலாம்
கோபமூட்டும் கேள்விகளும்
பதிலாய்
கசந்து வழியும்
புன்னகையும்
ஒரு பெயரில்
என்ன இருக்கலாம்
இருள் ஆழத்தில்
அதை ஒளிப்பதற்கான
தேடல்களும்
விளித்து ஒலிக்கும்
குரல்களும்
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
இரண்டு முறை
அனுமதி சரிபார்க்கப்பட்டது
கூடுதலாக உயரதிகாரி
விசேஷ கவனமளித்தார்
பக்கத்து இருக்கை
பதட்டத்துடன் இருந்தது
இறங்கும்போது மீண்டுமொருமுறை
மெலிதாக உச்சரித்து பார்த்தேன்
என் பெயரை
இந்த நாவல் படமாக்கப்பட்டிருக்கிறது. சுஜாதா எழுதிய கரையெல்லாம் செண்பகப்பூவை எப்படி மொக்க படமாக எடுத்தார்களோ அதற்கு இணையானது இந்த நாவலை வைத்து எடுக்கப்பட்ட படம். இயக்கம் ‘Mira nair வேறு. நாவலில் செங்கிஸின் காதலியாய் வரும் எரிக்காவிற்கான காதல் பக்கங்கள் நாவலில் அவ்வளவு உக்கிரமாக சொல்லப்பட்டு இதயத்தை பிராண்டும் சோகத்துடன் முடிந்திருக்கும். சினிமாவில் இயக்குனர் அவரை ஒரு சராசரி சந்தர்ப்பவாத காதலியாகவே காட்டியிருப்பார். பத்தாதற்கு விஸ்வரூபம் எபக்ட்டில் தீவிரவாதத்தை காட்ட நாவலில் சொல்லப்படாத படு அபத்த செயற்கை காட்சிகள். சினிமாத்தனமான கிளைமாக்ஸ்.

 

 

 

வெள்ளிக்கிழமை புதுப்படம் ரிலீஸ் ஜூலை 24, 2015

Filed under: Uncategorized — bashakavithaigal @ 4:25 பிப

“புதுப்படத்துக்கு 2 டிக்கெட் இருக்கு வேணுமா?”

அவன், அவன் அலுவலகத்தில் உணவு இடைவெளியின்போதும்,அவள், அவள் அலுவலகத்தில் தேநீர் இடைவெளியின்போதும் ’கியாஸ்க்’ எண்ணிட்ட இந்தி புதுப்படத்துக்கான டிக்கெட்டின் குறுஞ் செய்தியை காட்டி கேட்டுகொண்டிருந்தார்கள்.

விஷயம் இதுதான். அவனும் அவளும் ஒரே படத்துக்கு ஒரே தியேட்டரில் ஒரே வரிசையில் இரண்டு புக்கிங்குகளை தனித்தனியாக தங்கள் அலுவலக கம்யூட்டரிலிருந்து செய்திருந்தார்கள்.

மொபைல் மெசெஜ்களை வாங்கி பார்த்த அவன் மேலாளர் ஒரே நேரம் வேறப்பா…செம வேவ் லென்த் என்றார்.அவள் தோழி ரொமாண்டிக் படத்துக்கு ரொமாண்டிக் புக்கிங்கா…செம லவ்வுதான் என்று நகர்ந்தாள்.யாரும் 2 டிக்கெட்டுகள் வாங்கிகொள்ளவில்லை.

”எப்பவுமே நான்தான புக் பண்ணுவேன்.இது என்ன புதுசா? “ அவன் கோபப்பட்டான்.

“எப்பவுமே உனக்கு புக்ஸ்தான் வாங்கி தரேன்.புதுசா இருக்கட்டும் சர்ப்ரைஸ்னு நினைச்சேன் பாரு என்ன சொல்லணும்” கண்ணீர்விட்டாள்

இருவரும் இன்னும் இரண்டு டிக்கெட் வீணாகி இன்னொரு 1000 ரூவாய் தொலைய வேண்டாம் என்று வாத பிரதிவாதங்களுக்கு பிறகு தியேட்டருக்கு சென்றார்கள். ஆன்லைனில் கேன்சல் செய்ய முடியாவிட்டாலும் நேரில் வந்து ஏன் கேன்சல் செய்ய முடியாது என்று தியேட்டர் அலுவலகத்தில் விவாதித்து பார்த்தான் அவன். பன்னாட்டு கார்ப்ரேட் தியேட்டர் என்பதால் பாலிசி டாக்குமெண்ட் அவனிடம் காட்டினார்கள்.

அப்போதுதான் திருமணமான புதுமண தம்பதியரின் வாழ்வில் நிகழும் சிக்கல்கள்,பிக்கல்கள் என படம் 6 ரொமாண்டிக் பாடல்களுடன் கவிதையாக நகர்ந்து சென்றதால் படத்துடன் ஒன்றிவிட்டாள் அவள்.

பக்கத்தில் காலியாக இருந்த 2 இருக்கைகளை வெறித்து பார்த்துகொண்டே இருந்தான் அவன்.

கிளைமாக்சில் திரையை பார்த்து நாயகன் கண்ணீருடன் சொல்லும் ஷாயரிக்கு அர்த்தம் தெரியாமல் அவள் அவனிடம் நாயகன் என்ன சொல்கிறான் என்று கேட்டாள் அவள்.

“ம்ம்ம்ம்…உச்சி வெயில் மண்டய பொளக்குதுங்கிறான்”

அதற்கு பிறகு அவர்கள் பேசிகொள்ளவில்லை.

வீடு திரும்பிய அவள் அறைக்கு சென்று தன் லாப்டாப்பை விரித்து அப்ரைசல் கமெண்டுகளை அடிக்க ஆரம்பித்தாள்.அவன் ஹாலிற்கு தன் லாட்டாப்புடன் வந்து தன் டீமில் இருப்பவர்களுக்கு அப்ரைசல் அடிக்க ஆரம்பித்தான்.

எல்லா வார விடுமுறையை போல் அந்த வார விடுமுறையிலும் அந்த ஒரு வீட்டில் இரு அலுவலகங்கள் இரகசியமாக செயல்பட தொடங்கியது

 

Dance Dance Dance ஜூன் 7, 2015

Filed under: Uncategorized — bashakavithaigal @ 12:49 பிப

Novel:Dance Dance Dance

மதுரை காமராஜர் சாலையில் உடுப்பி ஹோட்டல் ஒன்று இருந்தது. காலையில் ஸ்பெசல் தோசை வெங்காய சாம்பாருடன் டி.எம்.எஸ்ஸின் பாடல்கள் உடலிலிருந்து உள்ளம் வரை நிறைக்கும்.காபி கசப்புடன் வெளிவரும்போது ஒரு புரிபடாத உணர்வை அது தரும். இன்று அங்கு ஒரு ஃபாஸ்ட் புட் கடை கிரீல் சிக்கன்,மஷ்ரூம் மசாலா வித்துகொண்டிருக்கிறது. சில சமயம் புரோட்டாக்களுடன் ஆம்லெட் ஃப்ரீ,பிரியாணி சிக்கன் 65 கோம்போ என்று மாடர்ன் முதலாளித்துவ ஆபர்களுடன் போர்டுகள் ஆங்காங்கு பளபளக்கிறது.
காலம் கண்ணுக்கு தெரியாத ஒரு மாய சுவர் அந்த பக்கம் இருந்த மனிதர்களை இந்த பக்கம் இழுத்துவிட்டிருக்கிறது.
Dance Dance Dance முராக்கமியின் metaphysical surrealistic novel. என்னுடைய உடுப்பி ஹோட்டலை போலவே நாயகனின் கனவிலும் ஒரு ஹோட்டல் அடிக்கடி வந்து போகிறது. அங்கிருக்கும் யாரோ அவனுக்காக அழுகிறார்கள். அது அவன் சில நாட்கள் இருந்த ஹோட்டல். மறுபடி அவன் சென்று பார்க்கும்போது அதே பெயரில் அந்த ஹோட்டல் நவீன வடிவங்களுக்கு பணியாளர்கள் உட்பட மாறியிருக்கிறது. அங்கு வைக்கப்படும் முதல் புள்ளி அவனை வேறு வேறு புள்ளிகளுக்கு நகர்த்துகிறது அவன் சந்திக்கும் மனிதர்களுடன். அந்த புள்ளிகளை அவன் இணைக்கிறான். குறியீடாக அவன் சந்திக்கும் மனிதர்கள் ஹவாயில் எலும்புகூடாக ஒரு இடத்தில் காட்சி தருகிறார்கள். பிறகு அந்த மனிதர்கள் ஒவ்வொரு மனிதராக மரணமடைய ஆறாவது மனிதன் யாரென்ற முடிவை சில மெட்டா இன்பர்மெஷன்களோடு வாசக யூகத்திற்கு விட்டுவிட்டு வழக்கம்போல் நாவலை முடித்திருக்கிறார் முராக்கமி. மர்மம் ஒருபுறம், நியோ கேப்பிடலிசம் மறுபுறம், வாழ்க்கை பற்றிய கேள்விகள் என எல்லா தளங்களிலும் நாவல் விரிவடைகிறது. கண்ணுக்கு தெரியாத ஒரு இழை இதை இணைத்திருக்கிறது. முராக்கமியிடம் பிடித்தது வாசகனுக்கு அவர் விடும் இந்த சவால்தான். இப்படி கதை எழுதுனா மில்லியன் டாலருக்கு ஏன் விக்காது-:)

 

தென்னிந்திய வரலாறு ஜனவரி 10, 2015

Filed under: Uncategorized — bashakavithaigal @ 12:58 முப

நிலந்தரு திருவிற் பாண்டியன் -இவர் அவையில்தான் தொல்காப்பியம்(இலக்கண நூல்) தொல்காப்பியரால் இயற்றப்பட்டது. அகத்தியத்திலிருந்து தொல்காப்பியம் வந்ததை நீலகண்ட சாஸ்திரி அகத்தியத்தின் ரெபரன்ஸ் தொல்காப்பியத்தில் இல்லை என்று மறுக்கிறார். அகத்தியத்தை எழுதிய அகத்தியரை பற்றி இன்னொரு சுவாரஸ்ய தகவல் இவர் ஆர்யவர்சத்திலிருந்து(இமயமலைக்கு விந்தியத்திற்கும் இடைப்பட்ட பகுதி அதாவது வட நாடு) தென்னாட்டுக்கு அனுப்பப்பட்டவர் . இதற்கு ஒரு புராண கதை உண்டு..அகத்தியர் பற்றிய குறிப்புகளை பார்த்தால் தலை கிறுகிறுக்கிறது. அகத்தியரின் ஆசிரமங்கள் இமயத்திலிருந்து நம் பொதிகைமலை ,மலேயா,சீனா,அரேபியா,இந்தோனிசியாவிலெல்லாம் இருந்திருக்கிறது.மகாபாரதத்தில் அகத்தியர் வருகிறார்.மணிமேகலையில் காந்தமன் என்ற சோழ மன்னனின் வேண்டுகோளை ஏற்று கமண்டலத்தில் இருந்து காவேரியை திறந்து விடுகிறார்.

அமர முனிவன் அகத்தியன் தனாது
கரகம் கவிழ்த்த காவிரிப் பாவை

என்று மணிமேகலையில் இருக்கிறது. கண்ணகி வாழ்ந்த புகார் நகரத்தின் பெருமையை வேறு சிலப்பதிகாரம் சொல்கிறது . பூம்புகார் ஐஸ் ஏஜின் முடிவில் கடல்கொண்டதாக ஒரு தியரி. கோவலனுக்கும் மாதவிக்கும் பிறந்த மகள் மேகலை…மணிமேகலை. சிலப்பதிகாரமே கிபி இரண்டாம் நூற்றாண்டில்தான் சேரன் செங்குட்டுவனின் தம்பி இளங்கோவடிகளால் இயற்றப்பட்டது. தோரயமாக பனியுகத்தின் முடிவிற்கும் சிலப்பதிகாரம் இயற்றப்பட்டதற்கும் ஒரு 10000 வருடங்கள் கால இடைவெளி இருக்கலாம். அப்போது 10000 வருடங்களாக(!!!) குறவர் கூத்தாகத்தான் அவர்களின் கதைகளில்தான் சிலப்பதிகாரம் இருந்திருக்கிறது. கோவலனின் மகள் மணிமேகலை என்றால் இளங்கோவடிகளே ஏன் மணிமேகலையையும் எழுதவில்லை. சீத்தலை சாத்தனாருக்கும் இளங்கோவடிகளுக்கும் என்ன லாஜிக்கல் கனெக்ட் என்று தெரியவில்லை. இதற்கிடையில் நிறைய அகத்திய குறிப்புகள் வேறு. இடம்,காலம் எல்லாவற்றிற்கும் அப்பாற்பட்டு அகத்தியர் இருந்திருக்கிறார். அந்த காலத்தில் ரிவர்ஸ்லேயே போற ஏரோப்ளேன் மட்டும்தான் இருந்ததா இல்லை ரிவர்ஸில போற டைம் மெஷினும் இருந்ததா என தெரியவில்லை-:). அகத்திய இடை செருகலை பற்றி நீலகண்ட சாஸ்திரி தன்னுடைய தென்னிந்திய வரலாற்று புத்தகத்தில் நிறைய கேள்விகளை எழுப்புகிறார்.

 

Circumstance ஓகஸ்ட் 31, 2014

Filed under: Uncategorized — bashakavithaigal @ 11:19 முப

மொழி : Persian

The song of sparrows ,Father மாதிரியான வரிசையில் ஈரானிய படங்களை பார்த்து அதன் மீதான ஒரு பிம்பத்தை கட்டமைத்திருப்பவர்களுக்கு இந்த படம் ஒரு பேரதிர்ச்சியை கொடுக்கும். படம் லெஸ்பியனிசத்தின் மேல் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. ஈரான் மாதிரியான நாட்டில் இதெல்லாம் சாத்தியமா என்று கேட்டால் கதை மாடர்ன் ஈரானில் ஒரு மேல் நடுத்தரவர்க்க குடும்பத்தில் நடைபெறுவதாக கட்டமைக்கப்பட்டிருக்கிறது. shireen,Atafeh என்று இரு தோழிகள்.shireen-ன் பெற்றோர் ஒரு விபத்தில் இறந்துபோகிறார்கள் அவளுக்கு வாழ்க்கையில் எல்லாமாய் இருப்பவள் அவள் தோழி Atafeh . Atafeh -ன் குடும்பம் இசையால் திளைத்திருக்கும் குடும்பம்.Atafeh -ன் கனவு பாப் பாடகியாவது. ஈரானில் அதெல்லாம் சாத்தியமில்லையென்பதால் துபாய் செல்வது என்று கனவில் இருக்கிறாள். உலகமே ஒரு பொருளாதார குடையின் கீழ் ,வீட்டை வால் மவுண்ட் டிவிகளும்,ஆப்பிள் லேப்டேப்புகளும் அதன் வழி தொடர்ச்சியாக மேற்கத்திய நாகரீகமும் நுழைய அடக்குமுறையை பின்பற்றும் அரசாங்கம், எளிய பெண்களான அவர்கள் மூச்சு திணறிபோகிறார்கள். சட்டத்தை எல்லா சாத்தியங்களிலும் மீறும் முயற்சியில் அலைக்கழிக்கப்படுகிறது அவர்கள் வாழ்க்கை.
லெஸ்பியன் காதலை கவித்துவமாக முதன்முதலில் சொன்ன படம் அல்லது நான் பார்த்த படம் இதுவாகத்தான் இருக்கும். ஏற்கனவே நிறைய பார்த்திருக்கும் ஹாலிவுட் படங்களிலும் பிரெஞ்சு படங்களிலும் லெஸ்பியன் என்ற பெயரில் சொல்லப்பட்டிருப்பது வெறும் LUST அல்லது கொடூரமான போர்னோக்கள்.
குறும்பாக,துள்ளலாக,இன்னொசன்ஸ் ததும்பி வழியும் அந்த தோழிகள் தங்களை பிரிக்கும் ஒவ்வொரு கணத்தையும் போராடி கடக்கும் காட்சிகள் வெகு நெகிழ்வாக இருக்கிறது. தோழிகளுக்கான அந்த உலகம்தான் எவ்வளவு அழகானது. உலகம் அந்த நட்பை பறவையின் இறகை மட்டுமல்ல அதன் சதையையும் பிய்ப்பதுபோல் குடும்பம்,பொறுப்பு,கலாச்சாரம்,ஆணாதிக்கம் என்ற பெயரில் தொடர்ச்சியாக பிய்த்தெரிந்துகொண்டுதான் இருக்கிறது.
இந்த படத்தின் இயக்குனர் Maryam Keshavarz என்ற பெண்.

 

The Devil’s Advocate

Filed under: Uncategorized — bashakavithaigal @ 11:18 முப

மொழி : English

He(Devil) said, “I am better than him(man). You created me from fire and created him(man) from clay.”
[ GOD] said, “Then get out of Paradise, for indeed, you are expelled.”
(Devil) said, “By your might, I will surely mislead them all”
—–Qur’an(38:76,38:77,38:82)

இந்த படத்தை Metaphoric-காகத்தான் புரிந்துகொள்ளவேண்டும்.எளிய உதாராணம் சாத்தானின் இருப்பிடத்தில் காட்டப்படும் நெருப்பு. அறமின்மை,ஆசை,இச்சை,ஈகோ என எல்லா தளங்களிலும் மனிதனால் வடிவமைக்கப்பட்ட வாழ்க்கையில் அவன் உண்மையில் அடைவது ஒன்றுமில்லை என்றுதான் இந்த படத்தின் விஷயமாக நான் புரிந்துகொள்கிறேன். படத்தில் வரும் சாத்தானுக்கு நாம் முதலாளிதுவம்,சர்வாதிகாரம்,பெரியண்ணன் என எந்த பெயரை வேண்டுமானாலும் கொடுக்கலாம்.சாத்தான் என்பது ஒரு குறியீடு. சாத்தனாக நெருப்பு பின்னணியில் அல்பசினோ வருகிறார்.சாத்தானின் வக்கீலாக கெனு ரீவ்ஸ் வருகிறார். தோல்வியே அடையாத வக்கீல் என பெயர் பெற்ற கெனு ரீவ்ஸ்க்கு சாத்தான் நியூயார்க்கில் தன்னுடைய கிளையண்டுகளுக்கு ஆஜாராக பெரும் சம்பளத்தில் பணிகொடுக்கிறார். நியூயார்க நகரின் மையத்தில் விசாலமாக அமைந்த அபார்ட்மெண்ட்டும் கொடுக்கப்படுகிறது. கெனு ரீவ்ஸ்க்கும் அவர் மனைவிக்கும் அறமற்ற வழியில் பெறப்படும் வெற்றிகள் பற்றி கவலை இல்லை. ஆசை,இச்சை எல்லாம் அவர்கள் வாழ்க்கையில் விளையாட துவங்குகிறது.
இந்த படத்திலும் கிளைமாக்சில் அல்பசினோ நிகழ்த்தும் உரை அற்புதம். அவர் உடல்மொழி கிளாஸ்.ஒரிஜனல் சாத்தானுக்கு கூட இந்த திறமையிருக்குமா என்பது சந்தேகம்தான் . பேய் நடிகன் என பட்டம் தரலாம் அல்பசினோவுக்கு.
படத்தின் இறுதியில் சாத்தான் Vanity definitely my favorite sin என்று சொல்லிவிட்டு கெக்களிக்கும்போது இரசிக்காமலிருக்க இயலாது-:)

 

A Seperation ஓகஸ்ட் 15, 2014

Filed under: Uncategorized — bashakavithaigal @ 7:15 பிப

இன்றைய படம் : A Seperation
மொழி : Persian

மத்தியதரவர்க்கத்தின் வாழ்க்கையுடனான போராட்டம் இந்த படத்தின் கதை என்று சொல்லலாம். 14 வருடங்கள் குறைகளேதும் இல்லாமல் வாழ்ந்த தம்பதியினர்.மகளின் எதிர்காலத்திற்காய் வெளி நாடு செல்ல விழையும் மனைவி வயதான நோயுற்ற தகப்பனை விட்டும் நாட்டை விட்டும் வர விரும்பாத கணவன் அடலசண்ட் வயதை நெருங்கிகொண்டிருக்கும் ஒரே மகள் இவர்களை சுற்றி கதை நடக்கிறது. மனைவி மறுக்க கணவன் மேல் எதுவும் சொல்ல கூடிய குற்றசாட்டுகள் இல்லாததால் நீதிபதி விவாகரத்தை மறுக்கிறார். மனைவி தன் பெற்றோருடன் சென்றுவிட வேலை செய்துதான் வாழவேண்டிய நிர்பந்தத்தில் கணவன் பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கிய கடவுள் நம்பிக்கை அதிகம் கொண்ட ஒரு பெண்ணை தன் தகப்பனை பார்த்துகொள்ள பணியில் அமர்த்துகிறான்.வேலை ,மகளின் படிப்பு,தகப்பனின் உடல்நிலை,விவாகரத்து கேட்டுகொண்டிருக்கும் மனைவியின் குடைச்சல் இவற்றுடன் கணவன் அல்லாடிகொண்டிருக்கிறான். ஒரு நாள் கணவன் வந்து பார்க்கும்போது அவனின் தகப்பன் கட்டிலில் கட்டப்பட்டு உயிருக்கு போராடிகொண்டிருக்கிறான். வெளியில் சென்றுவிட்டு வந்த பணிப்பெண்ணை கணவன் வெளியில் போ என்று கோபத்தில் தள்ள அடுத்த காட்சியில் அவள் கர்ப்பத்தில் குழந்தை இறந்துவிட்டதாக வழக்கு போகிறது. கோபித்துகொண்டு போன மனைவி மகளை மீட்கும் பொருட்டு கணவன் தள்ளியே விட்டிருப்பான் என்ற கோணத்தில் எல்லாவற்றையும் அணுகுகிறாள்.
பெரும்பாலான மனம் கசந்து வாழும் மத்திய தர குடும்பத்தில் உறுப்பினர்களை ஒட்டும் பசையாக குழந்தை(கள்) இருப்பதுபோல் இந்த குடும்பத்திலும் அவர்களது 11 வயது பெண் இருக்கிறாள். கிளைமாக்சில் அப்பாவுடன் இருக்கியா அம்மாவுடன் இருக்கியா என்ற பதிலை அவளிடமிருந்து எதிர்பார்க்கும் நீதிபதியிடம் அவள் என்ன சொல்ல போகிறாள் என்று சீட் நுனிக்கு வந்து அமரும்போது படம் முடிந்ததாக எழுத்துபோடுகிறார்கள். அதன் பின் முடிவை பார்வையாளன் காட்சிபடுத்துகிறான் அதன் மெளன சாட்சிகளாக கதவுக்கு இந்த பக்கமும் அந்த பக்கமும் ‘தனித்தனியே’ பிரிந்து அமர்ந்திருக்கும் கணவனும் மனைவியும் இருக்கிறார்கள்
2012 ல் இந்த படம் சிறந்த அயல் நாட்டு படத்திற்கான அகடாமி விருதை பெற்றுள்ளது