தடங்கள்

சுவாரஸ்யம் போய்விட்டதா சுஜாதா? பிப்ரவரி 28, 2008

Filed under: Uncategorized — bashakavithaigal @ 3:45 பிப

சுஜாதா எனது ஆசான்.எனது தொழில் சார்ந்த கல்விக்கும் எனது இலக்கிய தாகத்திற்கும்.படைப்பாளியாக இன்னும் அடியெடுத்து வைக்காவிட்டாலும் ஒரு வாசகனாக அவர் சுட்டி காட்டிய இலக்கியத்தின் பக்கங்களில் பயணித்துகொண்டிருக்கிறேன்.பாக்கெட் நாவல்களின் பாதங்களில் கட்டுண்டு கிடந்த
எனது இரசனையை தீவிர இலக்கியத்தின்பால் செல்ல தூண்டியவரும் அவரே.அவருக்கும் எனக்குமான இலக்கிய தொடர்பு ஒரு வாசகனுக்கும் படைப்பாளிக்கும் உள்ள தொடர்பு மாத்திரமே என்றபோதிலும் அவரது படைப்புகள் வாயிலாக நிறைய கற்றுகொடுத்திருக்கிறார்.
சார்பியல்பு தத்துவத்தை எளிமைபடுத்தி ஏன் எதற்கு எப்படியில் விளங்க வைத்தது முதல் ஆழ்வார் பாடல்களை இரசிக்க வைத்தது வரை.

மாணவனாக இருந்தபோது 1998 ல் கோவை CIT-க்கு கணிப்பொறி சார்ந்த ஒரு போட்டிக்கு சென்றிருந்தபோது அவரை நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிட்டியது.கூச்சம் காரணமாக தனிப்பட்டு உரையாடாவிட்டாலும் கூட்டத்தோடு சேர்ந்து செய்த கலந்துரையாடலில் அவர் எனக்கு என் தொழில்(மென்பொருள்) சார்ந்த பல வழிகளை திறந்து காட்டினார். படிக்கும் காலங்களில் நாங்கள் மைக்ரோசாப்டின் படைப்புகளுக்கு விசிறிகளாக இருந்தோம்.அவரிடம் உரையாடிய பிறகு எங்கள் குழுவில் பெரும்பாலோர் ஜாவாவுக்கு மாறிவிட்டார்கள். அவர் அப்போது ஜாவா பற்றி சொன்ன சாத்தியங்கள் இன்று சத்தியமாயிருக்கிறது.

இயல்பான நடையில் கதை சொல்லும் பாங்கு சுஜாதாவுடையது. திடுக்கிடும் திருப்புமுனைகள் வரும் கட்டங்களிலும் பத்து பக்கத்துக்கு வர்ணித்து புலம்பாமல் ஒரே வரியில் அதன் ஆழத்தை சொல்லும் பாங்கு சுஜாதாவுடையது. உதாரணம் கரையெல்லாம் செண்பகப்பூவில் வரும் அந்த முடிவு
    “என்ன சொல்ல நினைத்தாய் வெள்ளி”
சொல்லாமல் போன காதலின் சுமையாய் இந்த ஒரு வரிக்குள் அடக்கிவிடுகிறார்.
1980களில் அவர் ஜீனோ தொடரில் எழுதிய Hologram,robot மற்றும் ‘ஆ’ வில் எழுதிய Schizophrenia போன்ற சிக்கலான விஷயங்கள் எல்லாம் கதையோடே இழையோடி கடைசி வாசகனுக்கும் சென்று சேர்ந்தது.
அவர் ஒரு விஞ்கான எழுத்தாளரென்பதால் அவரிடம் திரும்ப திரும்ப மரணத்தை வெல்வது பற்றி பல்வேறு கேள்வி பதில்களில் பல்வேறு விதங்களில்
கேட்கப்பட்டதுண்டு. அதற்கு அவரின் பதில்
            “மரணிக்காமல் வாழ்ந்துகொண்டே இருந்தால் வாழ்க்கையின் சுவாரஸ்யம் போய்விடும்”
சுவாரஸ்யம் போய்விட்டதா சுஜாதா??

 

சொல்கிறாய் காதலை பிப்ரவரி 27, 2008

Filed under: bashakavithaigal — bashakavithaigal @ 3:32 பிப

கைவிரல்கள் எதேச்சையாக
கை தீண்டி
வெடுக்கென நீ மீட்டுக்கொள்ளும்போதும்
கண்களின் மோதலில்
வார்த்தைகள் சிக்கிக்கொள்ளும்போதும்
காலுடைந்து நான் கிடக்க
கண்களில் குளம் தேக்கும்போதும்
பார்க்கத்தோன்றியும் பார்க்க மறுத்து
பார்வையை இடம்மாற்றும்
உன் இரண்டு மனதவிப்பிலும்
கொட்டி விடுகிறாய்
என்னிடம் சொல்ல
மறுக்கும் உன் காதலை!

 

ஆரம்பிச்சுட்டாங்கய்யா…..ஆரம்பிச்சுட்டாங்க. பிப்ரவரி 26, 2008

Filed under: கற்றது கணிப்பொறியிய — bashakavithaigal @ 4:21 பிப

ஆரம்பிச்சுட்டாங்கய்யா…..ஆரம்பிச்சுட்டாங்க.

மென்பொருள் துறையில் துப்புரவு படுத்தும் பணி துவங்கிவிட்டது அதாங்க Layoff எனப்படும் ஆள்குறைப்பு வேலை.பெரும்பான்மையான நிறுவனங்கள் இப்பணியை துவக்கி வெவ்வேறு காரணங்கள் சொன்னாலும்  அடிப்படை அமெரிக்க பொருளாதாரம் படுத்து அங்கிருந்து வரும் பணிகள் சுணங்கி போனதுதான்.ஆள் குறைக்கும் பணி கீழ்கண்ட படிகளில் நிகழ்கிறது

1) consultant அல்லது தற்காலிக பணியில் உள்ளோர் முதல் கட்டமாக தூக்கப்படுகிறார்கள்

2) பெஞ்சுவாசிகள் அதாவது பணி இல்லாமல் பிராஜெக்ட் எதிர்பார்த்து காத்திருப்போருக்கு அடுத்த வேட்டு. ஆகையால் முடிந்தவரை ஏதாவது ஒரு பிராஜெக்டில் ஒ(ஓ)ட்டிகொண்டிருங்கள்.

3) Appraisal-ல் குறைவான மதிப்பெண்கள் அல்லது ரேட்டிங் வாங்கியவர். ஆதலால் அடிக்கு சின்ச்சாவை கொஞ்சம் சத்தமாக அடிக்கவும்.

பெங்களூரில் ஒரு PL  நண்பரின் புலம்பல்

” நம்மட்ட யாரு யாரு சரியா வேலை செய்யலனு கேக்குறானுங்க…..திருத்ததான் போறானுங்கனு சொன்னா தூக்கிட்டானுங்க…தூக்குனவனுங்க எம்பேர சொல்லி தூக்கிருக்கானுங்க……வெளியே போறவன்லாம் வெளியில வா உன்ன பாத்துக்கறேன்னு மிரட்டிட்டு போறான்…..சரியான கடியா இருக்கு”

சில நிறுவனங்களில் கொத்து கொத்தாக அதாவது 50 100 என்று நீக்கப்படுகிறார்கள். சில நிறுவனங்களில் 10 10 ஆக நீக்கப்படுகிறார்கள்.

என்னத்த செய்யிறதுங்கிறீங்களா???????????

1) ஒரு வருடத்துக்கு உங்கள் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யுமளவுக்கான் தொகையை சேமித்துகொள்ளுங்கள்

2) கடன் வாங்குவதை தவிருங்கள்

3) மற்றவர்களிடம் இருந்து உங்களை வேறுபடுத்தி காட்டிகொள்ளும் திறமைகளை வளர்த்துகொள்ளுங்கள்

4) வேறு தொழில் செய்வதற்கான் வாய்ப்பு சூழல் இருக்கும் பட்சத்தில் அத்தொழிலில் இன்னும் கூடுதல் கவனம் செலுத்தலாம்

5) மென்பொருள் துறையில் என்ன நடக்கிறதென்ற அதித விழிப்புணர்வுடன் இருங்கள்

 

PM(பன்னி மேய்க்கலாம்) பிப்ரவரி 16, 2008

Filed under: கற்றது கணிப்பொறியிய — bashakavithaigal @ 9:15 முப

சமீப காலங்களில் அடிக்கடி அடிபடும் ஒரு சொல் பிராந்திய மனப்பான்மை. இது அரசியலில் மட்டுமல்ல IT-யிலும் உண்டு.சிபாரிசு கடிதங்கள் மூலமாக தேர்ந்தெடுக்கப்படும் நிலைமை இன்னும் வராவிட்டாலும் பணியில் செர்ந்த பிறகு கிடைக்கும் மரியாதையில்,முக்கியத்துவத்தில் அவை காட்டப்படுவதுண்டு.பொதுவாக  இந்திய மென்பொருள் துறையில் பணிபுரிபவர்கள் பெரும்பாலும் கீழ்கண்ட ஐந்து பிரிவுகளில் அடங்குவர்.
1) தமிழர்கள்
2) மலையாளிகள்
3) ஆந்திரக்காரர்கள்
4) வட நாட்டுகாரர்கள்
5)கன்னடர்கள்
இவர்களை தவிர மற்றவர்கள் சொற்ப எண்ணிக்கையிலிருப்பர்.பொதுவாக எல்லா நிறுவனங்களிலும் இவர்கள் ஒரு குழுவாக அவர்களுக்குள் அமைத்துகொள்வார்கள்.அந்த குழுவின் மொழி பிராந்திய மொழியாய்தான் இருக்கும் Meeting-லும் கூட. மற்ற மொழிகாரர்கள் இந்த கூட்டத்தில் மாட்டினால் ‘மங்குனி பாண்டியாட்டம்’ அமர்ந்திருக்க வேண்டியதுதான். பெரும்பாலான நிறுவனங்களில் இந்த நிலைதான்.ஆக இப்படி இருக்கும் குழுவில் PM(ப்ராஜெக்ட் மானேஜர்) இருந்தால் இயற்கையாக அவருக்கும் அந்த குழு பாசம் வந்து விடும். ஆக அந்த குழுவில் நீங்கள் இல்லையென்றால் உங்கள் ‘சின்ச்சா…சின்ச்சா’ அவருக்கு புரியாது. உங்கள் சொல்லை விட அந்த குழுவில் இருக்கும் மற்றவர்களின் சொல் பெரிதாக எடுத்துகொள்ளப்படும். உதாரணத்திற்கு நீங்களும் அந்த பிராந்திய குழுவிலிருக்கும் ஒருவரும் சேர்ந்து ஒரு பணியை செய்ய நியமிக்கபடுகிறீர்கள். நீங்கள் இருவரும் அல்லது நீங்கள் மட்டும் அந்த பணியை திறம்பட செய்து முடிப்பதாய் வைத்துகொள்வோம். ஆனால் அதை உங்களோடு இருக்கும் அந்த பிராந்திய மொழிகாரர் தான் மட்டும் செய்ததாய் உங்கள் PM-ய் நம்ப வைத்துவிடுவார்.பொதுவாக இந்த குழு மனப்பான்மை மலையாளிகளிடம் அதிகமாகவும் தமிழர்களிடம் குறைவாகவும் இருக்கும் என்பது எனது தனிப்பட்ட அனுபவம். செயல் ஓரிடம் பலன் வேரிடம் என்பது சாப்ட்வேர் வாழ்க்கையில் சாதாரணமப்பா!!!!!

இதை தவிர ‘சின்ச்சா…சின்ச்சா’ அடிக்க பிரயத்தனப்படும் உங்கள் சக பணியாளர்கள் செய்யும் செயல்களாவன:

1) பணியில் பத்து படி ‘எச்சா’ ஆர்வம் காட்டுவதாய் காட்டிகொள்ள எல்லாருக்கும் தெரிந்த ஆனால் PM-க்கு மாத்திரம் தெரியாத தொழில்நுட்ப நுணுக்கங்களை ஊருக்கே மெயிலில் அனுப்புவது குறிப்பாய் PM-க்கு CC போட்டு

2) சக பணியாளருக்கு சாதாரண ஒரு விஷயத்தை விளக்கும்போது அந்த பக்கம் PM கடந்து போனால் ஐன்ஸ்டீன் range-க்கு சிந்திப்பதாய் காட்டிகொள்ள ஷேக்ஸ்பியர் range-க்கு  500 டெசிபலில் சத்தமாக பீட்டர் விடுவது.

3)meeting-ன் போது PM சொல்லும் அர்த்தமற்ற கோமாளித்தனமான பேச்சுக்கு ‘excellant point’,’wonderful’,’valid point’ என்று உதார் விடுவது

4)எப்பொழுது முடிப்பாய் என்ற PM-ன் கேள்விக்கு தொடங்காமலேயே முடிந்ததாயும் சில திருத்தங்கள் மட்டும் பாக்கி இருப்பதாய் தமிழ் சீரியல் range-ku கதை சொல்வது.

5)எட்டப்ப வேலை பார்ப்பது

சரி இந்த அளவுக்கு ஆட்டுவிக்கும் PM-ன் பணி என்னவென்றால் குடுக்கும் ப்ரொஜெக்ட் வேலையை திறம்பட முடித்துகொடுக்க அவரே பொறுப்பு(பெரிய பருப்பு இவரு!!!!!!). மாடு அல்லது பன்னி மேய்ப்பதை பார்த்திருந்தால் உங்களுக்கு எளிதாக விளங்கிவிடும். ஒரிடத்திலிருந்த பன்னி கூட்டத்தை பிரிதொரு இடத்துக்கு குழு சிதறாமல் கவனமாக ஒட்டி செல்ல வேண்டும்.பன்னிகளிடையே ஏற்படும் மோதல்களை சமரசப்படுத்த வேண்டும். ‘awesome’,’Great job’  என்று அடிக்கடி பன்னிகளுக்கு உற்சாகமூட்ட வேண்டும். அவ்வளவே!

இந்த பொழப்புக்கு நாலு பன்னி குட்டிகள வாங்கி மேய்க்கலாமுனு எங்க வீட்டு பெரிசு திட்டிட்டு போயிட்டாருங்கோ……..

http://youtube.com/watch?v=1ZDDHnv65dI

 

நீயில்லா பொழுதுகள் பிப்ரவரி 13, 2008

Filed under: bashakavithaigal — bashakavithaigal @ 7:38 பிப

save.gif

இன்றும் விடிந்தது
விரலெடுத்து தலைகோதி
உறக்கம் கலைக்கும்
உன் விரல்களன்றி!

தோப்பில் நகரில் இன்றும்
குயில்கள் கூவியது
அலுவலகம் செல்ல நேரமாகிவிட்டதை
நீயும் நானும் தவிர யாருமற்ற வீட்டில்
இரகசியமாய் சொல்லும் உன் குரலின்றி!

வழக்கம்போல் இன்றும்
துடைக்க துண்டு மறந்து
குளியலறையில் நுழைகிறேன்
பின் தெப்பமானது
உனக்கு பிரியமான
உன் சோபா
காப்பாற்ற நீயின்றி!

நீயற்ற பொழுதுகள் இனி
திரும்ப திரும்ப நிகழும்
கடலை பிரிந்து
கரையில் மாயும் அலைபோல!

 

இதெல்லாம் ஒரு பொழப்பா பிப்ரவரி 5, 2008

Filed under: கற்றது கணிப்பொறியிய — bashakavithaigal @ 7:38 பிப

பிரபல மென்பொருள்  நிறுவனம் 500 மென்பொருள் வல்லுநர்களை வேலையை விட்டு போக சொல்லியிருக்கிறது.ஒவ்வொரு வருடமும் எல்லா நிறுவனத்திலும் Performance appraisal என்று ஒன்று இருக்கும். அதாவது நாம் பள்ளியில் படிக்கும்போது Rank card தருவார்களே ஏறக்குறைய அது போல் எல்லா நிறுவனங்களும் எல்லா பணியாளர்களுக்கும் Rank இடுவார்கள்.
அதில் சரியாக பணி செய்யாதவர்கள்,பணி செய்ய திறனில்லாதவர்களுக்கு இறுதி மதிப்பெண் தரப்படும். அதனடிப்படையில் அவர்கள் Danger zone-ல் வருவார்கள். அதன் பிறகு அவர்களுக்கு தலைக்கு மேல் கத்தி தொங்கி கொண்டிருக்கும். அந்த மதிப்பெண்கள் முழுவதும் உங்கள் திறமையின் அடிப்படையில்  தேர்ந்தெடுக்கப்பட்டால் நீங்கள் அதிர்ஷ்டக்காரர்கள். பெரும்பாலான மென்பொருள் வல்லுனர்கள் சொல்லும் குற்றச்சாட்டு இந்த மதிப்பெண்கள் உங்களின் காக்காய் பிடிக்கும்(மேலதிகாரியை) திறனை பொருத்திருக்கிறது என்பதை. இருந்தாலும் உங்கள் மதிப்பெண்ணை மறுக்க உங்களுக்கு உரிமை உண்டு உங்களுக்கு சண்டையிடும் திராணி இருந்தால்.மேலதிகாரியின் கருணை இருந்தால் அவை பரிசிலிக்கப்படும். இதென்ன கவர்மெண்ட் ஆபிசா இல்லை கம்யூட்டர் நிறுவனமா என்று சந்தேகம் வருகிறதா. என்ன செய்வது. இரண்டு இடத்திலும் இருப்பது மனிதர்கள்தானே!!!!
இப்படி பணியில் பாதியில் செல்வதில் சில சங்கடங்கள் உண்டு. உண்மையில் உங்களுக்கு திறமை இருந்து பிற காரணங்களால் பணி நீக்கம் செய்யப்பட்டாலோ அல்லது பணி நீக்கம் செய்யப்பட்ட பிறகு நீங்கள் உங்கள் திறமையை வளர்த்துகொண்டாலோ நீங்கள் சுலபத்தில் பிற கம்பெனியில் வேலையில் சேர்வதென்பது கடினம்.அவர்கள் சீழ் பிடித்த புண்ணை மோந்து பார்ப்பதுபோல் உங்கள் முந்தைய பணி நீக்கத்தை அறிந்துகொள்வதிலேயே ஆர்வமாக இருப்பார்கள்.தென்னை மரத்திலே தேள் கொட்டினால் பனை மரத்தில் நெறி கட்டிய கதையாக அமெரிக்காவில் பொருளாதாரம் சரிந்து அது உங்கள் மதிப்பெண்ணில் பிரதிபலிக்கலாம்.ஆனால் அந்த காரணங்கள் அறிந்திருந்தும் அவை மறக்கப்பட்டு உங்கள் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் நீங்கள் பணி முன்பு பணி நீக்கம் செய்யப்பட்டவரென்றால்.
இப்பொழுதுதான் சில நிறுவனங்கள் இந்த பணி  நீக்கத்தை ஆரம்பித்திருக்கின்றனன.இது மேலும் விரிவடையும் என்ற ஒரு எதிர்பார்ப்பு இருக்கின்றது.2001-ல் நடந்த Dot com burst-ய் விட இது மிக மோசமாக இருக்கும் என்று பொருளாதார தலைகள் பெரிய கண்ணை உருட்டி மிரட்டுகின்றன.
போங்கடா………இதெல்லாம் ஒரு பொழப்பா………….

 

நீ யார் பிப்ரவரி 3, 2008

Filed under: bashakavithaigal — bashakavithaigal @ 11:40 பிப

துரத்தி வந்தவன் நீ — பின்
தூர போனவன் நீ!
நான்
விழும்முன்னே என்
வலிகொண்டவன் நீ!
கல்லெறிந்து குளத்தில்
என் பிம்பத்தை நெளியவைத்து
என்னை சிரிக்க வைத்தவன் நீ
கைவளையல் உடைத்து
கண்ணீர்விட வைத்தவன் நீ!
எங்கிருந்தாலும்
என் பிறந்தநாள் வாழ்த்து சொல்லி
சிலிர்க்க வைப்பவன் நீ!
கைமருதாணி சிவப்பை
கன்ன சிவப்போடு காட்டி
வெட்கப்பட வைத்தவன் நீ!
வலிகொண்டு கதறும் நேரமெல்லாம்
கோழிகுஞ்சாய் ஒடுங்க
பரந்த மார்பு விரித்தவன் நீ!
என் கவிதை படிக்கவென
என் தாய்மொழி கற்றவன் நீ!
இப்பொழுது எனக்கு மட்டும் சொல்
உறவென்றொரு சொல்லில்
நீ யார்?
நான் யார்?