தடங்கள்

உறவென்றால்… நவம்பர் 30, 2006

Filed under: கவிதைகள் — bashakavithaigal @ 10:42 முப

துரத்தி வந்தவன் நீ  பின்
தூர போனவன் நீ!
நான்
விழும்முன்னே என்
வலிகொண்டவன் நீ!
கல்லெறிந்து குளத்தில்
என் பிம்பத்தை நெளியவைத்து
என்னை சிரிக்க வைத்தவன் நீ
கைவளையல் உடைத்து
கண்ணீர்விட வைத்தவன் நீ!
எங்கிருந்தாலும்
என் பிறந்தநாள் வாழ்த்து சொல்லி
சிலிர்க்க வைப்பவன் நீ!
கைமருதாணி சிவப்பை
கன்ன சிவப்போடு காட்டி
வெட்கப்பட வைத்தவன் நீ!
வலிகொண்டு கதறும் நேரமெல்லாம்
கோழிகுஞ்சாய் ஒடுங்க
பரந்த மார்பு விரித்தவன் நீ!
என் கவிதை படிக்கவென
என் தாய்மொழி கற்றவன் நீ!
இப்பொழுது எனக்கு மட்டும் சொல்
உறவென்றொரு சொல்லில்
நீ யார்?
நான் யார்?

 பாஷா
 

Advertisements
 

நீயில்லா நிமிடங்கள் நவம்பர் 29, 2006

Filed under: கவிதைகள் — bashakavithaigal @ 2:03 பிப

முகம் மறந்த
முகவரி தொலைத்த
நாலாவது பரிமாணத்தில்
நாம் வாழ்ந்திருக்கிறோம்

இருப்பு என்பதுகூட
இங்கு நிச்சயமற்றது…
இருந்தாலும்
வெள்ளிதோறும் நாம் பார்க்கும்
கொல்லங்காளி அம்மனும்
விடியலில் தோன்றும் கனவில்
வெண்புகையாய் தெரியும்
உன் முகமும்
என்னிடம் இன்னும்
நீ இருப்பதை
நிச்சயப்படுத்துகிறது
உன் அதிகாலை பிரார்த்தனையில்
என் நலம் நாடும்
உன் நடுங்கும்
குரலோடு சேர்த்து…..

முடியாத கவிதையில்
முற்றுபுள்ளி விழுந்தது
முறித்துகொண்ட காதலோடு
இதயம் சொல்லும்
வார்த்தை வரைய
எந்தமொழியும் இங்கில்லை!

பாஷா

 

உன்பெயர் உச்சரித்து நவம்பர் 25, 2006

Filed under: கவிதைகள் — bashakavithaigal @ 8:15 முப

என்னிலிருந்து உன்னை
எடுத்தெறியத்தான் சொன்னாய்
எதை நான் எறிவேன் ?
உடலெல்லாம் உன் வர்ணம் பரப்பும்
உதிரத்தையா……
உன் குரல் கேட்டு
உரக்க ஒலிக்கும்
இதய துடிப்புகளையா……
உறக்கத்திலும் உன்பெயர்
உச்சரிக்கும் என் உதடுகளையா…
எதை நான் எறிவேன் ?

நெருப்பிலும் நிற்க துணிந்தமனம்
வெறுக்க உன்னை விடவில்லை
வடுக்களாய் என்னில் பதிந்துவிட்டாய்!

கண்களால் கைதுசெய்து
காதலிக்காத குற்றமும்செய்து உன்
நினைவுச் சிறையில்
நிரந்தரமாக என்னை
தள்ளிவிட்டாய்
இனி நான்
உன்பெயர் உச்சரித்து
சுவாசித்திருப்பதை தவிர
வேறு என்ன செய்வது ?
—————————–

 

காத்திருக்கிறேன் நவம்பர் 24, 2006

Filed under: கவிதைகள் — bashakavithaigal @ 8:48 முப

உன் தங்கைகளுக்காகவும்
சொப்பனத்திற்கு பிந்திய பின்னிரவுகளில்
உன் உறவுகளை நினைத்து
என் நெஞ்சில்
நீ வடிக்கபோகும் கண்ணீருக்காகவும்
என் காதலை
என் நெஞ்சில் சமாதிவைத்து
மலர்கொத்தும் வைத்துவிட்டேன்!

ஒருவருக்கொருவர் உடன்வர முடியாத
திசைகளின் விளிம்பில்
ஒரு நாள் சந்தித்தோம்
நீ வந்த திசையின்
சாலையிலெல்லாம் நீ
தெளித்த கண்ணீர்.
ஒரு புன்னகையை மட்டும்
உன்னிடமிருந்து வாங்கி
உன்னை உன் திசை
அனுப்பிவிட்டு
கரையான்களாய் அரிக்கும்
உன் நினைவுகளுக்கு
வெற்று வெளியில்
சிதைமூட்டிகொண்டிருக்கிறேன்!

இருந்தாலும்….
உன் ஜானவாசத்தில்
என் ஜன்னலோரம் தாமதிக்கும்
உன் உறவு கூட்டம்
உன்பெயர்கொண்ட கடவுள்
வானொலியில் அடிக்கடி ஒலிக்கும்
உனக்கு பிடித்த பாடல்
நீ விரும்பி கேட்கும் அரிசிமுறுக்கு.
இவையாவும்
உன் நினைவுகளை
எரியும் சிதையிலிருந்து
எடுத்து போடுகிறது!

காதலை காற்றில்
கரைத்து வாழ்க்கை
அங்கிகரித்த அந்தஸ்த்தின்
பரிவட்டத்தை தரித்திருக்கிறாய்
இன்னும் நான்
உன் நினைவுகளுடன் மட்டுமே
போராடி தோல்வியுற்று
ஆயுளை அவசரமாய் கழிக்க
ஆண்டவனிடம் வரம்கேட்டு
நீ வரும் குளக்கரையில்
கல்லெறிந்து காத்திருக்கிறேன்!

 

பயணம்

Filed under: என் தடங்கள — bashakavithaigal @ 8:47 முப

துவங்கிய இடத்தில் துவங்கி
தொடரும் இடத்தில் தொடர்ந்து
துரத்தி கொண்டிருக்கிறது
விட்டு வந்த வாழ்க்கை!

அம்மா ஆரம்பித்துவைக்க
அப்பா அடுத்தடிகாட்ட
சுற்றமும் நட்பும்
வழியெங்கும் வழிப்போக்கர்களாய்.
சில கையசைப்புடன்
சில கண்ணீருடன்
சில சம்பிரதாய சிரிப்புகளுடன்
யாவும் வழியனுப்புதலின்
வகைகளன்றி வேறொன்றுமில்லை!

நகரும் நொடிகளில்
சக பயணியாய்
நகரும் முகங்கள்
நேசித்த முகங்கள்
நிழலென இருப்பதில்லை
பயண விதிகளோ ?

எனவே
இதயத்தின் நந்தவனத்தில் என்
கல்லறை வேண்டாம்
இட நெருக்கடி இருக்ககூடும்
நரகத்தின் நெருப்பில்
நான் சுமந்த பயண நினைவுகளுடன்
என்னை எரித்துவிடுங்கள்!

sikkandarbasha@hotmail.com
 

 

உன்னை கேட்கிறேன் நவம்பர் 23, 2006

Filed under: கவிதைகள் — bashakavithaigal @ 11:14 முப

வெண்பனி உருகும் விடியற்காலை
கண்மணியவள் முத்தத்தில் களைத்து
காலை உறக்கத்தில்….
உறக்கம் கலையவேயில்லை
உடல் என்னது இங்கே
என்னவள் எந்த தீவின் கரையிலோ இல்லை
எந்த மனிதகுவியலுடன் உடன்கட்டையோ……

காலையிலிட்ட கண்திருஷ்டி அழியவில்லை
இன்னும் விரிந்த உன் கைகள்
என்னை தூக்கிவிடம்மா என்ற உன்
இறுதி அலறலை
எனக்கு எதிரொலித்துகொண்டிருக்கிறது
என்ன செய்வேனடி கண்ணே
மூன்று பிள்ளைகாரியெனக்கு
இரு கைகள்தானே!

சுற்றியிருக்கு மனித தலைகள்
சொந்தங்கள் தேடி
“அதோ இடப்பக்கம் என் குழந்தை,
அம்மா எந்திரிச்சு வாம்மா,
அம்மா…. அப்பா…. அக்கா….”
கதறுலுக்கிடையே உன்னை தேடி அப்பா
கழுத்தருகில் கிழிந்த உன் சட்டை உன்
அடையாளம் சொல்கிறது
இதோ என் பிரிய அப்பா
உனக்கு ஒரு பிடி மண்
உன்னை சேர்ந்ததா?

தேசிங்கு ராசா
தேரில் நீ வருவாயென
கனவு கண்டவளை
கடல் கொண்டதென்ன

காதலி என் காதலி
மாலை வாங்க உனக்கு
அம்பது ரூவா வச்சிருந்த
அரைகைசட்டைய தேடுறன்டி
கடலம்மா அதையாவது எனக்கு
கொடுத்துடு!

இத்தனை கதைகளையும்
எழுதி விட்டாய்
கடலே………என் காதலி
நேசித்தவளை வெறுக்கும்
நெஞ்சம் நான்கொண்டவனில்லை
உன்னுடன் கலந்திருக்கும் என்
ஒவ்வொரு துளி கண்ணீருக்கும்
என்ன பதில் சொல்வாய்?

பாஷா

 

என் தடங்கள் நிரம்பி வழிந்த இடங்கள் நவம்பர் 22, 2006

Filed under: என் தடங்கள — bashakavithaigal @ 4:16 பிப

இது ஒரு பயணக் கட்டுரையின் முன்னுரை அல்ல. என் பாதங்கள் ஸ்பரிசித்த, என் கண்கள் உறைந்த,என் இதயம் இடம் பெயர்ந்த
என் உதடுகளின் உச்சரிப்பு மட்டுமே. இதை வாசிக்கும் எவரும் இந்த தரிசனம் அடைந்திருக்கலாம். நான் தொட தவறிய இடங்களை
தொட்டும் காட்டலாம். தொடர்வேன் தொடருங்கள்………

முதலடி----->>>>