தடங்கள்

விசித்திர உலகம் 1: ஓகஸ்ட் 15, 2014

Filed under: Uncategorized — bashakavithaigal @ 7:13 பிப

முராக்கமி எழுதிய kafka on the shore நாவலின் magical realism பக்கங்களை உப கதைகளாக கொஞ்சம் திரித்து ரேயானுக்கு சொல்லும்போது அவனுக்கு பிடித்த பகுதி நாவலில் வரும் மீன் மழை. வானத்திலிருந்து ஐலா மீன்களும் மத்தி மீன்களும் தொப் தொப்பென்று சாலையில் விழுந்து துள்ளிகொண்டிருந்தன என்று சொன்னால் விழி விரிய கேட்டுகொண்டிருப்பான். எனக்குமே ’கேட்டை திறந்து’ திறந்து செல்லும் நாவலின் மர்ம பகுதிகளையும் தாண்டி இந்த மீன் மழையில் ஆச்சரியம் இருந்தது பிறகு இது வெறும் மேஜிக்கல் ரியலிசத்திற்காக புகுத்தப்பட்டதாக இருக்கலாம் என்று நம்பிகொண்டிருந்தேன். மெய்யாலுமே waterspout என்று ஒன்று இருக்கிறதாம். கடலில் நீருக்கு மேலே வானத்திற்கும் கடலுக்கும் இடையே புனல்/குழாய் போன்ற அமைப்பு/சுழல் உருவாகி கடலில் இருக்கும் சிறு மீன்கள் எல்லாம் வானத்திற்கு உறிஞ்சப்பட்டு நகரும் மேகங்களில் மீன் பயணித்து நிலத்தில் மழையுடன் மீன் மழையாக கொட்டுமாம். அது சரி மோசசின் காலத்தில் அப்பம் மழை எப்படி கொட்டியிருக்கும்?

 

வரலாறும் அதன் கெக்களிப்பும் ஜூலை 29, 2014

Filed under: Uncategorized — bashakavithaigal @ 11:12 பிப

வரலாறும் அதன் கெக்களிப்பும்

கடவுள் மோசஸ் மூலமாக தங்களுக்கு அருளிய ,சாலமன் மன்னன் ஆலயம் எழுப்பிய தேவதூதன் அவதரிக்கபோகிற ஜெருசெலம் என்ற ஒற்றை குறிக்கோளுடன் வரலாறு முழுவதும் யூத இனம் அந்த நகரை நோக்கி சுவரில் எறியப்பட்ட பந்தாக திரும்ப திரும்ப வந்துகொண்டிருந்தது. மற்ற இனங்களை விட யூதர்களில் வட்டி தொழிலின் மூலம் பெரும் பணம் ஈட்டியவர்கள், மாபெரும் விஞ்ஞானிகளும் அறிஞர்களும் கலைஞர்களும் வரலாறு முழுவதும் நிறைந்திருக்கிறார்கள். கிபி 16ம் நூற்றாண்டில் இஜ்வி என்ற யூத இளைஞர் தான் தான் யூதர்கள் நம்பும் இறை தூதன் என்ற ஒரு அறிவிப்பை செய்ததை பெரும்பாலான யூதர்கள் நம்ப துவங்கி சந்தேகம் எழுப்பியவர்களை தாக்க துவங்கினார்கள். எந்தளவுக்கு என்றால் சாலமோன் ஆலயம் தொடர்பான நிகழ்வுகளை புறக்கணித்து தன் பிறந்த நாளை இஜ்வி கொண்டாட பணித்தற்கு உடன்பட்டது வரை.ஜெருசெலத்திற்கு சிங்கத்தின் மேல் அமர்ந்துசெல்வேன் என்று சொன்னதற்கு ஆர்பரித்தார்கள். சோகம் என்னவென்றால் துருக்கி சுல்தான் இஜ்மியை பிடித்து மிரட்டியபோது உடனடியாக மதம் மாறிய இஜ்மியை பார்த்து மூளை சலவை செய்யப்பட்ட அவன் பக்தர்களும் வெறித்தனமாக மதம் மாறினார்கள்.

முதல் உலகப்போரில் அந்தந்த நாட்டிலிருந்த யூதர்கள் அந்தந்த நாட்டு படைகளில் இருந்தார்கள்(அதற்கு தனியாக ஒரு காரணம் இருந்தது).பெரும்பாலான நாடுகள் யூத அணி என்று தனியாகவே வைத்திருந்தது. ஜெர்மான்ய படைகளுக்கு புதிய போர் ஆயுதமாக விஷவாயு ஆயுதத்தை கண்டுபிடித்து கொடுத்தவர் ஹெபர் என்ற யூதர். பின்னால் இந்த விஷவாயு ஆயுதம் புதிய பரிமாணம் எடுத்து இரண்டாம் உலகப்போரின்போது பல இலட்சம் யூதர்கள் கொல்லப்படுவதற்கு காரணமாக இருந்தது. கத்தி எடுத்தவன்….தெரியுமா என்பது தெரியவில்லை

இரண்டாம் உலகப்போரை ஹிட்லர் துவங்குவதற்கு முன்னால் தன் படை தளபதிகளுக்கு ஹிட்லர் இரகசிய கட்டளைகள் பிறப்பித்திருந்த நிலையில் பல தளபதிகள் ஜெர்மானியின் போர் திறன் போர் நடத்தும் அளவுக்கு இல்லை என சந்தேகப்பட்டார்கள் விலகினார்கள். ஹிட்லரின் பேச்சு மக்களை ஹிட்லரின் பக்கம் என்றென்றும் வைத்திருந்தது. ஆரம்பத்தில் ஹிட்லரின் திட்டங்கள் ஆஸ்திரியா, சுடன்லாண்ட் போலாண்ட்டை கபகளீகரம் செய்து பிரான்சை ஆக்ரமிக்க துவங்கியபோது நாஜி ஆதரவாளர்களில் பலர் ஹிட்லரை தேவதூதனாவும் ஹிட்லரின் சன்னத உரைகள் வானிலிருந்து அவருக்கு அருளப்படுவதாகவும் நம்பதுவங்கினார்கள்.ஹிட்லருமே கூட. சோகம் என்னவென்றால் ரஷ்யா பெர்லினை சரமாரியாக தாக்க துவங்கிய நிலையில் கோயபெல்ஸ் உதிர்த்த முத்துக்கள் “மக்கள் மேல்தான் தவறு அவர்களே எங்களை பெரும்பான்மை கொடுத்து தேர்ந்தெடுத்தார்கள் அவர்கள் உயிருக்கு நாங்கள் பொறுப்பேற்க முடியாது” போரின் முடிவில் மக்கள் SS,Gestapo, யூதர்கள் எல்லாவற்றையும் விட்டுவிட்டு தங்கள் துயரங்களுக்கு ஹிட்லரே காரணம் என்று முடிவுகட்டினார்கள்.தேவதூதன் இப்போது சாத்தானாகிவிட்டார்.

வானிலிருந்து எதிரொளிக்கும் வரலாற்றின் சிரிப்பு குரூரமாக கூட தெரியலாம். அதன் பார்வை மட்டுமல்ல அதன் ஆட்காட்டி விரலும் மனிதர்களை நோக்கிதான் நீட்டிகொண்டிருக்கிறது

 

குரான்

Filed under: Uncategorized — bashakavithaigal @ 11:09 பிப

வ.த.5: குரான்

இஸ்லாமிய வரலாறு என்பது குரான் இல்லாமல் முழுமையடையாது. கடவுளின் வார்த்தைகளை ஆதாரமாக வைத்தே 6ம் நூற்றாண்டுக்கு பிறகு இஸ்லாமிய உலகம் இயங்கிகொண்டிருக்கிறது.கடவுளின் வார்த்தைகள் 6 வயதிலேயே தாய் தந்தையை இழந்து அனாதையான, குழந்தை பருவத்தில் இருந்தே உழைத்து வாழவேண்டிய சூழலில் இருந்த, எழுத படிக்க தெரியாத,ஏன் வறுமை,ஏன் அநீதி,ஏன் அடக்குமுறை என இடையறாது மலையில் இருந்த குகையில் சிந்தித்த முகமது என்ற மனிதரின் மூலமாக இந்த உலகுக்கு சொல்லப்பட்டது. கடவுளின் வார்த்தைகளை எடுத்து வந்த வானவரின் வருகையை முகம்மது முதலில் ஏற்கவில்லை.தனக்கு என்னவாயிற்று என்று குழம்பினார். தொடர்ச்சியாக வந்த நாட்களில் வானவர் வாசி என்றபோது எதை வாசிப்பது தனக்கு எழுத படிக்க தெரியாது என்று மறுத்தார். அதன் பின் முதல் வசனம் வானவர் ஜிப்ராயில் முகம்மதுக்கு சொல்ல அன்று முதல் கடவுளின் வார்த்தைகள் இறங்க ஆரம்பித்தது. குரான் ஒரே நாளில் பைண்ட் செய்த புத்தகமாக இறங்கவில்லை.அதேபோல் எல்லா வசனங்களும் ஜிப்ராயீல் மூலமாகவும் இறங்கவில்லை. இறை தூதரான பிறகு மக்காவில் வாழ்ந்த 13 ஆண்டுகளிலும் மதினாவில் வாழ்ந்த 10 ஆண்டுகளிலும் வசனங்களாக இறங்கியது. ஆரம்பத்தில் இறங்கிய வசனங்கள் ஒரே கடவுள் ,கடவுளுக்கு இணை வைப்பது கூடாது என்று ஆரம்பித்து அதிலிருந்து விரிந்து வரலாற்று செய்திகள்,அறிவியல் உண்மைகள், ஆட்சிமுறை,போர் நடத்தை என பல தளங்களில் விரிவடைந்தது. குரானின் பெரும்பாலான வசனங்கள் ஒரு சம்பவத்தை தழுவி அதன்பின் இறங்கியதாக இருக்கும். ஜிகாத் என்று தவறாக எல்லா தளங்களிலும் புரிந்துகொள்ளப்பட்ட வார்த்தை போர்சூழலில் இறங்கிய வசனத்தில் நிறைய காணகிடைக்கும். குரானை படிக்க கொஞ்சம் வரலாறு,ஆண்டுகளை பற்றியதான அடிப்படை கணித அறிவு,கொஞ்சம் லாஜிக்கல் மூளை, நிறைய இதயம் தேவைபடும். இவையின்றி அணுகும்போது உங்கள் முன் முடிவுகளுடன் எந்த வசனத்தை வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் புரிந்துகொள்ளலாம். முதலில் இது அரபு மொழியில் எழுதப்பட்டது இரண்டாது கவிதை நடை. நிறைய விஷயங்கள் metaphoric-காக சொல்லப்பட்டிருக்கும். அரபு மொழியில் ஒரு சொல்லிற்க்கு நிறை அர்த்தங்கள் கிடைக்கும். அப்படியென்றால் சரியான அர்த்ததை அடைவது எப்படி? அங்குதான் context கைகொடுக்கும். உதாரணத்திற்கு ஜிகாத் என்ற வார்த்தைக்கு பொதுவான அர்த்தம் போராடு என்று இருக்கும். உனக்குள் போராடு, நோயை எதிர்த்து போராடு;போரில் போராடு என்று வெவ்வேறு காண்டெக்ஸ்ட்களில் சொல்லலாம். இந்த வார்த்தை அத்கைய வெவ்வேறு தளங்களில் குரானில் சொல்லப்பட்டிருக்கிறது. வசனம் இறங்கிய சூழலை விட்டுவிட்டால் வசனம் தவறாக புரிந்துகொள்ளபடகூடிய வாய்ப்புகள் அதிகம். எனக்கு தெரிந்து நிறைய குரான் படிப்பவர்கள் அர்த்தம் புரியாது படிப்பவர்களாகவும்,அப்படியே அர்த்தம் புரிந்து படிக்கும், சொல்லி தரும் பல மத குருமார்கள் அதை ஒரு நல்லது கெட்டது(Haram Halal) சொல்லும் ரெபரன்ஸ் நூலாகவும் பயன்படுத்துவதையே நான் பார்த்திருக்கிறேன். அதை தாண்டி குரானை இலக்கிய தளத்தில்,அறிவியல் விவாதங்களில்,வரலாற்று செய்திகளில் சொல்லப்படவேண்டியது அவசியம்.குரானை அப்போது சாமன்யர்கள் அர்த்தம் விளங்கி படிக்க முடியாதா என்றால் அதற்கும் வழி இருக்கிறது. ஹதீஸ்கள் என்று மார்க்க அறிஞர்களால் நபி வாழ்க்கையொட்டி நபி மற்றும் அந்த காலத்தில் வாழ்ந்த நபி தோழர்கள் மூலமான சம்பவங்களால் எளிதாக விளக்கப்படுவது. இதில் ஒரு சிறு பிரச்சனை இந்த ஹதீஸ்கள் கிட்டதட்ட குரானிற்கு பிறகு 200 ஆண்டுகள் கழித்து எழுதப்பட்டவை. ஆதலால் அதண்டிக் ஹதீஸ்களை மட்டுமே இன்றிருக்கும் மார்க்க குருமார்கள் ஏற்றுகொள்வார்கள்.

குரான் வசனங்களாக இறக்கப்பட்ட பிறகு நபி அதை சொல்ல அவர் தோழர்கள் ,அலி முதலான அவர் உறவினர்கள் அதை மனனம் செய்தனர்.மனனம் செய்தவர்கள் பார்ச்மெண்ட் தாள்களிலும்,ஒட்டக எலும்புகளிலும் இரண்டு சாட்சிகளை முன் வைத்து எழுதினர். பின் அதன் பிரதி இஸ்லாம் பரவியிருந்த பகுதிகளுக்கெல்லாம் அனுப்பப்பட்டது. நபி காலத்தில் அது முழு புத்தகமாக இல்லை. நபிக்கு பிறகு வந்த அபுபக்கர்,உமர் காலத்திலும் அது புத்தகமாக இல்லை. ஆனால் போர்கள் நடந்தன. போர்களில் குரானை மனபாடம் செய்திருந்த பலர் இறக்கும் சூழலில் உமருக்கு பின் வந்த உத்மான் அதை புத்தகமாக பாதுகாக்கவேண்டிய அவசியத்தை உணர்ந்து ஒரு கமிட்டி அமைத்து குரானை மனபாடம் செய்திருந்த பலரை வைத்து முழு புத்தகமாக குரானை வடிவமைத்தார். அலி( நபியின் மருமகன்)முதலான மாபெரும் அறிஞர்களின் பங்களிப்பு அந்த வடிவமைப்பில் இடம் பெற்றிருந்தது. குரான் இறங்கிய வரிசையில் தொகுக்கபடவில்லை. சட்டென புரிவது நீண்ட சாப்டர்கள் முதலிலும் சிறிய சாப்டர்கள் கடைசியிலுமென இறங்குவரிசையில் தொகுக்கப்பட்டது. முதல் சாப்டருக்கும் அடுத்த சாப்டருக்குமிடையில் அரபு இலக்கியம் சார்ந்து ஒரு கண்ணி இருப்பதாக கூறுகிறார்கள். தெரியவில்லை. குரான் புத்தகமாக எல்லா அறிஞர்களாலும் ஏற்றுகொள்ளபட்ட பிறகு உத்மான் பிற எல்லா மூல ஆதாரங்களையும் வேறுபட்ட வெர்சன்களையும் எரித்துவிடுமாறு கூறிவிட்டார். அன்றிலிருந்து குரான் என்றால் உலகில் இருப்பது ஒரே ஒரு வெர்சன் மட்டுமே

 

ஷியா சன்னி பிளவும் இன்றைய எண்ணெய் அரசியலும்

Filed under: Uncategorized — bashakavithaigal @ 11:06 பிப

வ.த.6: ஷியா சன்னி பிளவும் இன்றைய எண்ணெய் அரசியலும்

And hold firmly to the rope of Allah all together and do not become divided. And remember the favor of Allah upon you – when you were enemies and He brought your hearts together and you became, by His favor, brothers. And you were on the edge of a pit of the Fire, and He saved you from it. Thus does Allah make clear to you His verses that you may be guided.
————-(Quran-3:103)

வரலாற்று ரீதியாக ஒரு கூட்டத்தில்/இனத்தில்/சித்தாந்தத்தில் நாட்டில் பிளவு ஏன் ஏற்படுகிறது/ஏற்படுத்தப்படுகிறது என்று பார்த்தால் அரசியல் காரணங்களால் என்று சொல்லிவிடலாம். அப்படியான அரசியல் காரணங்களால் ஏற்பட்ட பிளவுதான் இது. குரான் மேற்சொன்ன வசனத்தில் சொல்லப்பட்ட ஒற்றுமையை பல இடங்களில் வலியுறுத்துகிறதேயன்றி ஷியா என்றோ சன்னி என்றோ ஒற்றை சொல்லையும் தன்னில் வைத்திருக்கவில்லை.
நபிக்கு முன்னதான அரேபிய பகுதிகளின் நிலைக்கு கொஞ்சம் முன்னால் சென்று பார்த்தால் சில நியாயங்கள் புலப்படலாம்.அன்றைய அரேபியா ஒற்றை ஆட்சி என்று இல்லாமல் பெரும்பாலும் பல்வேறு குழுக்களாக இருந்தது. தெருவுக்கு ஒரு ராஜா இல்லாத குறை ஒன்றுதான்.இந்த குழுக்களுக்கிடையில் அடிக்கடி தகராறு வேறு. பக்கத்திலேயே பெரும் சக்தியுடன் இருந்த பைசாண்டெய்ன் போன்ற ஒற்றை மன்னரின் ஆதிக்கத்தில் இருந்த பேரரசுகள். இப்படியான சூழலில்தான் நபி இவர்களை ஒருங்கிணைத்து ஒரு குடையின் கீழ் கொண்டு வந்தார். தவிர நபி காலத்தில் மதீனாவில் பெருமளவு வாழ்ந்த யூதர்களும் கிறிஸ்தவர்களும் நபி ஆட்சியில் சமய நல்லிணக்கத்துடன் வாழ்ந்து வந்தனர். இந்த சூழலில் தனது 63வது வயதில் நபி இறக்க நாட்டில் பெரும் குழப்பம். நபிக்கு நிறைய ரோல்கள் அப்போது இறந்தன இறை தூதர்,மார்க்க அறிஞர், அரசியல் தலைவர், நாட்டின் தலைவர் என்று. ஒரு நாட்டின் தலைவர் இறக்கும் சூழலில் உடனடியாக பதில் தலைவர்கள் போடுவார்கள் நாட்டின் பாதுகாப்பு கருதி. அப்படியான சூழலில் நபியின் தோழர் உமர் முன்மொழிய அபுபக்கரை நபி தோழர்கள் இணைந்து அடுத்த நாட்டின் தலைவராக தேர்ந்தெடுத்தார்கள் . நபியே இறுதி தூதர் நபி வழி நடப்பது மட்டும் என்பதே குறிக்கொள் என்று குறிப்பிடப்படும் அரேபிய சொல் ‘சுன்னா’ அதிலிருந்து பிறந்ததுதான் இந்த பிரிவு. அதே நேரத்தில் நபியின் அன்பிற்கு பாத்திரமானவர் இஸ்லாமை முதலில் ஏற்றுகொண்ட ஆண் அலிதான் அடுத்த தலைவராக வேண்டும் என்று ஒரு சாரார் சொன்னார்கள்.அதற்கு அவர்கள் ஆதாரமாக குரானின் ஒரு வசனத்தையும் ஹதீசில் சொல்லப்பட்ட நபியின் ஒரு உரையையும் ஆதாரம் காட்டுவார்கள். அலியே அடுத்த தலைவர் என்று சொன்ன குழு ஷியாத்துல் அலி என்று தங்களை அழைத்துகொண்டது. ஷியா என்றால் பார்ட்டி/குரூப் என்று அர்த்தம். அதன் பிறகு நிகழ்ந்த கசப்பான சம்பவங்களால் அலி பெரிதாக ஏதுவும் உரிமை கோராது ஒதுங்கியே இருந்தார்.அபுபக்கர்,உமர்,உத்மன் என வரிசையாக நபி தோழர்கள் பதவியேற்றபோதும் அலி அவர்களுக்கு மார்க்க சம்பந்த விளக்கங்களில் , வழக்குகளின் தீர்ப்பு சம்பந்தமான சந்தேகங்களில்,குரானின் புத்தக வடிவமைப்பில் உதவிசெய்தார் இதை தவிர்த்து தனியாக அமைதியாகவே வாழ்ந்து வந்தார்.உத்மன் காலத்தில் ஏற்பட்ட குழப்பத்திலும் அதை தொடர்ந்து உத்மன் கொல்லப்பட்ட சூழலில் அடுத்த தலைவர் பதவிக்கு தகுதி வாய்ந்த யாரும் இல்லா சூழலில் பலரின் வற்புறுத்தலுக்கு இணங்க அலி 4வது கலிபாவாக பொறுப்பேற்றுகொண்டார். இதில் ஷியா பிரிவினர் முதல் 3 கலிபாக்களை ஏற்பதில்லை. உத்மன் காலத்தில் நிகழ்ந்த அரசியல் கொலைகளை மனதில்கொண்டு அலி தலை நகரை மதினாவிலிருந்து ஈராக்கிற்கு மாற்றிகொண்ட்டார். ஈராக் ஈரான் பிரதேசம் அலியின் ஆதரவாளர்களால் அன்றிலிருந்து நிரம்ப தொடங்கியது. அலி பதவிக்கு வந்ததை பிடிக்காத ஆட்கள் ஒன்று சேர்ந்து கவிழ்க்கும் வேலையை தொடங்கினர். பல ஆண்டுகள் சிவில் வார் நீடித்தது எந்தளவுக்கு என்றால் நபிக்கு பிரியமான அவரின் பேரன்களை அலிக்கு எதிரானவர்கள் கொல்லுமளவுக்கு.
ஆக இப்படிமுதலில் இரண்டாக பிரிந்த பிளவு மென்மேலும் ஒவ்வொரு நாட்டிலும் குரானை படித்து அதை இண்டர்பிரெட் செய்த மதகுருமார்களின் பெயரால் மேலும் பிளக்க துவங்கியது.
இந்தியாவில் இந்திய கலாச்சாரத்தை அடியொற்றி சூபியிசம் பல்கி பெருக தொடங்கியது. இந்த இசங்களினால் மாசுபட்ட மார்க்கத்தை சுத்தப்படுத்துகிறேன் என்று 17ம் நூற்றாண்டில் வகாப் என்பவர் அன்றையே அரேபிய மன்னருடன் சேர்ந்து கிளம்பிவந்தார். பின்னர் அவர் பெயரால் வகாபியிசம் என்பதை அவர் சொல்லவில்லை விமர்சனம் செய்த ஐரோப்பியர்கள் அப்படி எழுதினார்கள்.
இந்தியாவை பொறுத்தவரை ஒரு சாதரண முஸ்லீமை கூப்பிட்டு நீ எந்த பிரிவு என்று கேட்டு பாருங்கள் ஷியா சன்னி என்று வராது நீங்கள் அந்த பெயரை சொல்லி கேட்டாலும் 80% பேருக்கு அப்படி ஒரு மெயின் பிளவு இருப்பது தெரியாது. அவர்கள் சூபியிசம் என்ற பெயர் அறியாமல் அதன் பழக்கவழக்கங்களையும், ஷியா பிரிவினரின் வழக்கம் என்று அறியாமல் அந்த வழக்கங்களையும் மற்றபடி பெரும்பாலும் குரான் சொன்ன சரி தவறுகளின் அடிப்படையில் நடப்பவர்களாகவும் இருப்பார்கள்.
சமகால அரசியலில் அரேபியா என்ற நாடு சன்னி முஸ்லீம்கள் இருக்கும் இடத்தையும் ஈரான் ஷியா முஸ்லீம்கள் அதிகமாக இருக்கும் இடத்தையும் ஈராக் பல்வேறு பிரிவினர் பல்வேறு அளவில் இருக்கும் பிராந்தியத்தையும் சார்ந்தது. அப்பா புஷ்ஷும் மகன் புஷ்ஷும் மரபார்ந்த போரில் ஈடுபட்ட சதாம் உசேனின் இராணுவத்தை எளிதாக ஒடுக்கினார்கள் ஆனால் இன்று ஏன் ISIS ஆட்களுக்கு எதிராக ஒரு துரும்பை கூட தூக்கி போடாமல் அமெரிக்கர்கள் அமைதி காக்கிறார்கள் என்றால் எண்ணெய் அரசியல்.சன்னி பிரிவை சார்ந்த தன் அரேபிய நண்பனுக்காகவும் ஷியாக்கள் அதிகம் வசிக்கும் ஈரானுக்கு செக் வைப்பதற்காகவும் அமெரிக்கர்கள் வேடிக்கை பார்த்துகொண்டிருக்கிறார்கள். இஸ்ரேல் என்ற நாட்டையும் பாரு இவன் உங்கள அடிச்சுருவான் நான் இருக்கேன் என்று அரேபிய நண்பர்களை மிரட்டுவதற்காக வைத்துள்ளார்கள்.
இங்கு டெல்லியில் இஸ்ரேலிய தூதரகத்திற்கு எதிரிலும்,சென்னையில் வள்ளுவர்கோட்டம் போன்ற இடங்களிலும் குழந்தைகள் கொல்லப்படுவதற்கு எதிராக நடந்த போராட்டத்தில் ஒரு பங்காவது அரேபிய நாடுகளில் நடந்திருக்குமா என்பது சந்தேகம்தான்.

 

உலகமும் யூத வெறுப்பும் ஜூலை 27, 2014

Filed under: Uncategorized — bashakavithaigal @ 9:46 பிப

வ.த.3:உலகமும் யூத வெறுப்பும்

Let him kiss me with the kisses of his mouth;
For thy love is better than wine
——- Song of solomone

யூதர்கள் மேல் அப்படி என்ன வெறுப்பு வரலாறு ஏன் அவர்களை காலம்காலமாக விரட்டிகொண்டிருகிறது? சிமிட்டிக் மதங்களில் முதல் மதம் யூத மதம் இவர்கள் அதன் பின் தோன்றிய கிறிஸ்தவ இஸ்லாமிய மதங்களை அங்கிகரீப்பதில்லை. ஆனால் கிறிஸ்தவ இஸ்லாமிய மதங்கள் யூதர்களின் நூலில் வரும் இறை தூதர்களையும் அங்கிகரித்துகொண்டிருக்கின்றன்.அது மட்டும்தான் காரணமா?
மோசஸ்/மூசா எகிப்தியர்களிடம் இருந்து இஸ்ரேலியர்களை(யாகூப்பின் சந்ததிகள்) காப்பாற்றி அழைத்து வரும் வழியில் இறைவன் அழைப்பின் பேரில் 10 கட்டளைகளை வாங்கி வர சொல்கிறார்.அதற்குள் பொறுமை இழந்த இஸ்ரேலியர்கள் கன்றுகுட்டி செய்து வழிபடுகிறார்கள்.டென்சனான கடவுளை மோசஸ் சமாதானம் செய்வதை இஸ்ரேலியர்கள் பயத்துடன் பார்த்து இனி இந்த தவறு நிகழாது உருவ வழிபாடு செய்வதில்லை என்று உறுதிசெய்கிறார்கள்(பிற்பாடு தங்கள் சந்ததிகளுக்கும் அதை ஒரு வழுவான நம்பிக்கையாகவே விதைக்கிறார்கள்). கடவுள் அவர்களுக்கு தேனும் பாலும் ஓடபோகும் நகரத்தை பரிசளிக்கிறார். அதுதான் ஜெருசலம். பாலஸ்தீனிய பழங்குடிகளிடம் பெரிதாக எந்த போராட்டமும் இன்றி வாழதொடங்கும் இஸ்ரேலியர்கள் தங்கள் சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்ததொடங்குகிறார்கள். பின்னால் வந்த சாலமன் மன்னன் கடவுளுக்கு ஆலயம் அமைத்து அந்த ஆலயத்தில் மோசஸ் வாங்கிய 10 கட்டளைகளை வைக்கிறான். பின்னால் வந்த ரொமானிய படையெடுப்பில் சாலமன் ஆலயம் இடிக்கப்படுவதுடன் முதன்முதலாக இஸ்ரேலியர்கள் தங்கள் நகரை விட்டு வெளியேற துவங்குகின்றனர். பின்னால் வந்த எரோத் மன்னன் ஆலயத்தை இரண்டாம் முறையாக கட்டிதருகிறான். கிறிஸ்துவுக்கு முன்னால் ரோமான்யர்களுக்கு மன்னர்களே பெரும்பாலும் கடவுள் . மன்னனுக்கு ஆலயத்தில் வழிபாடு நடக்கிறது. ஏற்கனவே கடவுளின் கோபத்துக்கு இணை வைத்து கண்டிக்கப்பட்ட யூதர்கள் அதை எதிர்க்கிறார்கள். அடக்கப்படுகிறார்கள். யூத வெளியேற்றம் தொடருகிறது. பின்னால் வந்த தீர்க்கதரிசி ஜோசுவா(ஏசு) சாலமன் ஆலயம் இடிக்கப்படும் என்று தீர்க்கதரிசனம் கூறுகிறார். கோபமுற்ற யூத மதகுருமார்கள் மன்னனை ஏற்றிவிட ஏற்கனவே ஏசுவின் மேல் கோபத்தில் இருக்கும் மன்னன் தன் வீரர்களை ஏவுகிறான். யூதாஸ் வேறு இயேசுவை காட்டி கொடுத்துவிட அன்று ஆரம்பிக்கிறது கிறிஸ்தவர்களுக்கும் யூதர்களுக்குமான கொளுந்துவிட்டெரியும் வெறுப்பு. விளைவு சிலுவை போர்களிலெல்லாம் யூதர்கள் இலவச இணைப்பாகவே கொல்லப்படுகிறார்கள். ஐரோப்பா முழுவதும் கிறிஸ்தவம் பரவ யூதர்கள் ஓடிகொண்டே இருக்கிறார்கள். பின்னர் நபி அதன்பின்னால் வந்த நபி தோழர்களின் ஆட்சியில் ஓரளவு அவர்களுக்கு அடைக்கலமும் ஆசுவாசமும் கிடைத்திருக்கிறது. நபி யூதர்களுடன் சேர்ந்து தொழுகையெல்லாம் நடத்தியிருக்கிறார்.
நபி காலம் முடிந்து 400 ஆண்டுகளுக்கு பிறகு மறுபடியும் சுல்தான்களின் ஆட்சியில் சிதைக்கப்படுகிறார்கள். காரணம் ரஷ்ய மன்னர்களுடன் இணைந்து துருக்கி படையெடுப்புக்கு உதவி செய்தது என்று வரலாறு சொல்கிறது.
வரலாறு மட்டுமல்ல உலகம் அவர்களை வெறுக்க காரணம். கிறிஸ்தவ,இஸ்லாமிய,புத்த மதத்தை வெளியிலிருந்து தழுவுவதைபோல் வேறு யாரும் யூத மதத்தில் நுழைந்துவிட முடியாது அவ்வளவு எளிதாக. தங்களது தனித்துவத்தை இன்றும் அவர்கள் பேணுகிறார்கள். நாடு என்பதை தாண்டி யூத இனத்துக்கு அதிக முக்கியத்துவம் தருபவர்கள் என்பதால் தாங்கள் குடியிருக்கும் எந்த நாட்டுடன் எளிதில் ஒட்டுபவர்களாக இருக்க மாட்டார்கள் என்ற குற்றசாட்டு உண்டு.முதல் உலகப்போரில் ஜெர்மன் தோற்றதுக்கு யூதர்கள் காரணமென ஆரம்பித்துதான் ஹிட்லர் யூத வெறுப்பை விதைத்தான். இதை தவிர தாங்கள் வாழ்ந்த பகுதியில் வட்டிவிடும் தொழிலில் கொடிகட்டி பறந்தவர்கள். அறிவில் சிறந்தவர்கள். கொஞ்சம் பொறாமையும் சக மனிதர்களுக்கு இருந்திருக்கலாம்…தவறான வட்டி கணக்கு சொல்கிறார்கள் என்ற குற்றசாட்டு எவ்வளவு தூரம் உண்மை என்று தெரியவில்லை.
எனக்கே ஒரு சிறு சொந்த அனுபவம் உண்டு. அதனாலெல்லாம் பொதுவான ஒரு யூத வெறுப்பைகொண்டிருப்பது அடி முட்டாள்தனம். அதைதான் உலகம்செய்துகொண்டிருக்கிறது

 

வ.தகவல் 2 ஜூலை 12, 2014

Filed under: Uncategorized — bashakavithaigal @ 5:15 பிப

வ.தகவல் 2: இஸ்ரேல்
கடைசி எல்லைக‌ளுக்கு அப்பால்
நாங்க‌ள் எங்கே செல்வோம்
க‌டைசி வான‌த்திற்கு அப்பால்
ப‌ற‌வைக‌ள் எங்கே செல்லும்
கடைசிக் காற்றை சுவாசித்த‌ பின்னால்
தாவ‌ர‌ங்க‌ள் எங்கே உற‌ங்கும்
—பாலஸ்தீன கவிஞர் ம‌ஹ்மூத் த‌ர்வீஷ்

1947-ல் நமக்கு எல்லாம் தெரிந்த ஒரு வலி நிறைந்த பிரிவினையை ஏற்படுத்திகொடுத்தார்கள் பிரிட்டிஷ்காரர்கள். அதே போல் இன்னொரு பிரிவினை(பிடுங்கி கொடுத்தது என்பதுதான் சரியாக இருக்கும்) பாலஸ்தீன பகுதியில் அப்பகுதியை தன் கைவசம் வைத்திருந்த பிரிட்டிஷாரால் ஏற்படுத்தப்பட்டது . அதற்கு முன்பு அப்பகுதியில் யூத்,இஸ்லாமிய,கிறிஸ்தவர்கள் ஒற்றுமையாக வாழ்ந்துகொண்டிருந்தார்கள். இரண்டாம் உலகப்போரின்போது ஐரோப்பாவெங்கும் கான்சண்ட்ரேஷன் கேம்ப் ஏற்படுத்தி யூத இன படுகொலைகளை ஹிட்லர் நடத்திகொண்டிருந்தான். பிழைத்த யூதர்கள் பெரும் அதிர்ச்சியில் ஓரிடத்திலிருந்து தாங்கள் போராட முடியாத தங்களுக்கென கேள்வி கேட்க நாதியற்ற இருந்த அரசியல் சூழலை உணர்ந்திருந்தனர்.பின்னாலில் பிரிட்டிஷ் நேச படைகள் ஹிட்லரை வெற்றிகொண்டதை தொடர்ந்து யூதர்கள் தங்களுக்கென ஒரு நாடு அமைக்கும் முயற்சியில் பிரிட்டிஷ் பாலஸ்தீனத்தை பிளந்து இஸ்ரேலிய நாடு யூதர்களுக்கென தனியாக அமைத்துகொடுத்து உலகெங்கும் ஹிட்லரால் பாதிக்கப்பட்ட யூதர்களை அங்கு மீள்குடியேற்றம் செய்தது.
யூதர்கள் ஏன் பாலஸ்தீன பகுதியில் குறிப்பாக குடியேற விரும்பினார்கள்?
ஜெருசலம். தொன்மையான நகரங்களில் ஒன்று.ஜீடாயிசம்,கிறிஸ்தவம்,இஸ்லாம் மூன்றும் ஒன்றுக்கொன்று தொடர்புடைய மதங்கள். இந்த மூன்று மதங்களுக்கும் ஜெருசலம் முக்கியமான ஆன்மிக தலம். குரான் யூதர்களையும் கிறிஸ்துவர்களையும் அவர்களின் காலத்தில் வழங்கப்பட்ட வேதத்தையும் ஆப்ரஹாம்,இஸ்ராயீல்,மோசஸ்,ஜீசஸ் போன்ற இறை தூதர்களையும் பற்றி நிறைய இடங்களில் சொல்கிறது. அவ்வாறு சொல்லப்பட்ட ஆப்ரஹாம் ஈரான் ஈராக்கிய பகுதியிலிருந்து கிறிஸ்து பிறப்பதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பு ஜெருசலம் பக்கம் குடியேறி அங்கு தன் குடியேற்றத்தை அமைத்தார் . பிறகு வந்த அவரின் வழிதோன்றலான ஜாக்கப்(யாகூப் நபி) என்ற இஸ்ராயிலின் பெயரால்தான் இன்றைய இஸ்ரேல்( Medīnat Yisrā’el) நிறுவப்பட்டது. பெயர் வைக்கும்போது Children of Israel என்ற பெயரும் பரிந்துரைக்கப்பட்டது(இஸ்ராயீலின் மக்களே என்று குரானும் அனேக இடங்களில் யூதர்களை விளிக்கிறது). தன் நாடு வெளியிலிருந்து வருபவர்களால் பிளவுபடுவதை தன் ஆன்மாவில் ஏற்பட்ட காயமாக ஒவ்வொரு நாடும் உணரதான் செய்யும் . விளைவு பிளவுபடும்போது ஏராளமான கலவரங்கள் வெடித்தன. அவசரகதியில் பிரிட்டிஷ் பிரிவினை ஏற்படுத்தி சென்றதென்றால் இஸ்ரேலிடமிருந்து உங்களுக்கு பாதுகாப்பு என்று அரபு நாடுகளிடம் சொல்லி அமெரிக்கா அரபு நாட்டு எண்ணெய் வயல்களை குறி வைத்தும் இன்னொரு புறம் இஸ்ரேலின் செயல்களை மேம்போக்காக கண்டித்தும் அமெரிக்கா எண்ணெய் அரசியல் செய்துகொண்டிருக்கிறது. இந்த பிரச்சனை விரிந்து பூதாகரமாகி இந்த உலகம் குழந்தைகள் வாழ தகுதியற்றதாகிகொண்டிருக்கிறது. வெகு விரிவான தகவல்களுக்கு பா.ராகவனின் நிலமெல்லாம் இரத்தம்,டாலர் தேசம்.

Indeed, those who believed and those who were Jews or Christians or Sabeans [before Prophet Muhammad] – those [among them] who believed in Allah and the Last Day and did righteousness**** – will have their reward with their Lord, and no fear will there be concerning them, nor will they grieve.(Quran:2-62)

 

தகவல் 1 ஜூலை 6, 2014

Filed under: Uncategorized — bashakavithaigal @ 2:46 பிப

தகவல் 1: கொஞ்ச நாள் முன்பு பேஸ்புக்கில் ஒரு பிரபல எழுத்தாளர் எழுதியிருந்தார் இஸ்லாம் என்பது கிபி 6ம் நூற்றாண்டில் முஹம்மது நபியால் ஆரம்பிக்கபட்டது என்று. அவர் மட்டும் அல்ல இன்னும் டிக்‌ஷனரிகளும் பல தகவல் சொல்லும் முனையங்களும் அப்படியான ஒரு வரையறையைதான் கொடுத்துகொண்டிருக்கிறது. இஸ்லாம் என்ற அரபி சொல்லுக்கு இறைவனிடம் சரணடைதல் என்று பொருள். குரான்படி மனிதன் பூமியில் காலடி வைத்திருந்த நாளிலிருந்து இஸ்லாம் இங்கு இருக்கிறது. அங்கனம் இறைவனிடம் சரணடைந்த முதல் நபி ஆதம். ஆதமிற்கு பிறகு நூற்றுக்கணக்கான இறை தூதர்களும் அவர்கள் மூலமாக இறை செய்தியும் அனுப்பப்பட்டது(குரான்:35:24,4:163,4:164,40:78). குரானில் பெயரளவில் 25(ஆதம்,ஆபிரஹாம், நோவா,ஏசு…….) நபிமார்களின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. முகம்மது நபி அதில் இறுதி தூதராவார்.
இந்த இறை தூதர்கள் பைபிளிலும், யூத மத நூல்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளார்கள். ஆகையால்தான் இஸ்லாம்,கிறிஸ்தவம்,ஜுடாயிசம் எல்லாம் சிமிட்டிக் மதங்கள் என குறிப்பிடபடுகின்றன.
Allah என்ற அரபி சொல்லும்,eli eli lama sabachthani என்று கர்த்தர் சொல்லும் வாசகத்தில் வரும் eli என்ற Hebrew சொல்லும்,Elah,Eloh போன்று ஜீடாயிசத்தில் சொல்லப்படும் சொற்களும் இறைவன் என்று ஒரு பொருளை மட்டுமே குறிப்பவை எல்லாமே ஒரே வேர் சொல்லில் இருந்து உருவானவை. அரபி ,ஹீப்ரூக்கெல்லாம் Root language aramic(இயேசு பேசிய மொழி) மொழி. தமிழ்,கன்னட மொழிக்கு ஆதி திராவிட மொழி போல்.
கத்தோலிக்கத்தை ஏற்றுகொண்டும், அரபு உலகுடன் வர்த்தக தொடர்புகளையும் நல்லுறவுகளையும் பேணிகொண்டும் Antisemitism என்ற பெயரில் யூதர்களை ஹிட்லர் கொன்று குவித்தது ஹிட்லரால் பிரசாரம் செய்ய்பட்ட ஒரு வரலாற்று மோசடி . அந்த மோசடியான ஹிட்லரின் அடையாளத்தை கேள்வி கேட்காமல் உலகம் குறிப்பிட்ட காலம் அந்த படுகொலைகளை நடக்கவிட்டு வேடிக்கை பார்த்தது இஸ்ரேல் என்ற தேசம் உருவாக மறுக்க முடியாத தர்க்க நியாயங்களாக வரலாறு முன்வைக்கிறது. வரலாறு முழுவதும் கொடூரமாக அடக்குமுறைகளுக்கு ஆளான யூதர்கள் இஸ்ரேல் என்ற நாட்டின் பெயரால் அந்த அடக்குமுறைகளை தன் கையில் எடுத்தது வரலாற்றில் இன்னொரு சோகம்(மேற்படி விவரங்களுக்கு பா.ராகவனின் நிலமெல்லாம் இரத்தம் படிக்கவும்).