தடங்கள்

வெள்ளிக்கிழமை புதுப்படம் ரிலீஸ் ஜூலை 24, 2015

Filed under: Uncategorized — bashakavithaigal @ 4:25 பிப

“புதுப்படத்துக்கு 2 டிக்கெட் இருக்கு வேணுமா?”

அவன், அவன் அலுவலகத்தில் உணவு இடைவெளியின்போதும்,அவள், அவள் அலுவலகத்தில் தேநீர் இடைவெளியின்போதும் ’கியாஸ்க்’ எண்ணிட்ட இந்தி புதுப்படத்துக்கான டிக்கெட்டின் குறுஞ் செய்தியை காட்டி கேட்டுகொண்டிருந்தார்கள்.

விஷயம் இதுதான். அவனும் அவளும் ஒரே படத்துக்கு ஒரே தியேட்டரில் ஒரே வரிசையில் இரண்டு புக்கிங்குகளை தனித்தனியாக தங்கள் அலுவலக கம்யூட்டரிலிருந்து செய்திருந்தார்கள்.

மொபைல் மெசெஜ்களை வாங்கி பார்த்த அவன் மேலாளர் ஒரே நேரம் வேறப்பா…செம வேவ் லென்த் என்றார்.அவள் தோழி ரொமாண்டிக் படத்துக்கு ரொமாண்டிக் புக்கிங்கா…செம லவ்வுதான் என்று நகர்ந்தாள்.யாரும் 2 டிக்கெட்டுகள் வாங்கிகொள்ளவில்லை.

”எப்பவுமே நான்தான புக் பண்ணுவேன்.இது என்ன புதுசா? “ அவன் கோபப்பட்டான்.

“எப்பவுமே உனக்கு புக்ஸ்தான் வாங்கி தரேன்.புதுசா இருக்கட்டும் சர்ப்ரைஸ்னு நினைச்சேன் பாரு என்ன சொல்லணும்” கண்ணீர்விட்டாள்

இருவரும் இன்னும் இரண்டு டிக்கெட் வீணாகி இன்னொரு 1000 ரூவாய் தொலைய வேண்டாம் என்று வாத பிரதிவாதங்களுக்கு பிறகு தியேட்டருக்கு சென்றார்கள். ஆன்லைனில் கேன்சல் செய்ய முடியாவிட்டாலும் நேரில் வந்து ஏன் கேன்சல் செய்ய முடியாது என்று தியேட்டர் அலுவலகத்தில் விவாதித்து பார்த்தான் அவன். பன்னாட்டு கார்ப்ரேட் தியேட்டர் என்பதால் பாலிசி டாக்குமெண்ட் அவனிடம் காட்டினார்கள்.

அப்போதுதான் திருமணமான புதுமண தம்பதியரின் வாழ்வில் நிகழும் சிக்கல்கள்,பிக்கல்கள் என படம் 6 ரொமாண்டிக் பாடல்களுடன் கவிதையாக நகர்ந்து சென்றதால் படத்துடன் ஒன்றிவிட்டாள் அவள்.

பக்கத்தில் காலியாக இருந்த 2 இருக்கைகளை வெறித்து பார்த்துகொண்டே இருந்தான் அவன்.

கிளைமாக்சில் திரையை பார்த்து நாயகன் கண்ணீருடன் சொல்லும் ஷாயரிக்கு அர்த்தம் தெரியாமல் அவள் அவனிடம் நாயகன் என்ன சொல்கிறான் என்று கேட்டாள் அவள்.

“ம்ம்ம்ம்…உச்சி வெயில் மண்டய பொளக்குதுங்கிறான்”

அதற்கு பிறகு அவர்கள் பேசிகொள்ளவில்லை.

வீடு திரும்பிய அவள் அறைக்கு சென்று தன் லாப்டாப்பை விரித்து அப்ரைசல் கமெண்டுகளை அடிக்க ஆரம்பித்தாள்.அவன் ஹாலிற்கு தன் லாட்டாப்புடன் வந்து தன் டீமில் இருப்பவர்களுக்கு அப்ரைசல் அடிக்க ஆரம்பித்தான்.

எல்லா வார விடுமுறையை போல் அந்த வார விடுமுறையிலும் அந்த ஒரு வீட்டில் இரு அலுவலகங்கள் இரகசியமாக செயல்பட தொடங்கியது

Advertisements