தடங்கள்

மழைகழுவிய இலையில் ஜூலை 30, 2007

Filed under: bashakavithaigal — bashakavithaigal @ 7:50 முப

மழைகழுவிய இலையில்
பனித்துளியாக உருக்கொண்டு
மல்லிகைமொட்டின் இதழ்பிரித்து
அதனுள் இறங்கி நின்றாய்
ஒரு தேவதைகுட்டியென
நீ ஜனித்த இந்த நாளில்தான்
என் சந்தோஷ உலகம் சூல்கொண்டது!

சுற்றியெனை வட்டமிட்டு
சுருக்கியென்னுலகை அதனுள்
மணல்வீடுகட்டி குடியேற அழைத்தாய்!

தோளிற்குமேல் வளர்ந்து என்
தோழியானாய் நீ
எனது உணர்வுகளை
உனது உதடுகளால் மட்டும்
சிறப்பாக செதுக்கமுடிந்தது!

பின்னொரு மாலையில் தேம்பலுடன்
காதல்கணவன் கரம்பற்றி கடல்கடந்துசென்றுவிட்டாய்
நீ தண்ணீர் ஊற்றா
வாடிபோன ரோஜா செடிகளுடன் தினம் உன்
வரவை எதிர்பார்த்து பிரிய
மகளே நானும்!

 

கவிதை ஜூலை 5, 2007

Filed under: bashakavithaigal — bashakavithaigal @ 7:43 முப

உன்னிடம் தன்னைசொல்ல
தன் எழுத்தாணிக்கொண்டு
தன்னையெழுதிக்கொண்டே போகிறது
என் கவிதை!

தொடங்கப்படும் கவிதையெல்லாம்
தோழியுன் விமரிசன வரிகளால்மட்டுமே
முடிவடைகிறது
முடிவடையாமல் முடமான கவிதைகள்
ஏராளமுண்டு என்னிடம்!

முன்பெல்லாம் உன்னைசொல்ல
ஓராயிரம் பக்கங்களாய் விரிந்த என்கவிதை
உன் பெயரளவில் இன்று
சுருங்கிவிட்டது!

எழுதுபவளாய் எழுதப்படுபவளாய்
எல்லாமாய் என்னில்
நீ நிறைந்துவிட்டாய்!