தடங்கள்

நிகழ்வுகள் திசெம்பர் 28, 2006

Filed under: கவிதைகள் — bashakavithaigal @ 12:36 பிப

சில சொற்களால்
சில நிகழ்வுகள்
நித்தம் நடந்தேறிகொண்டிருக்கிறது
சொற்கள் சம்பிரதாயமாக
தெளிக்கப்பட்டபோதும்……

உணர்வுகள் உள்ளத்தில் புதைந்து
உதடுகள் வார்த்தைகள்
ஒப்பிக்கும் இயந்திரங்களாய்
மாறிப்போனது.

சமூக பார்வையாளர்களின்
ஜன்னல்வழி காட்சிக்காக
நித்தம் ஒரு
நாடகம் நடந்தேறிகொண்டிருக்கிறது.

கல்யாணமென்றே வழிப்போக்கர்களின் வாழ்க்கை
குப்பை காகிதத்தில்
கோட்பாடுகளாக நிரப்பப்படுகிறது.

சகித்துகொள்வேனென்றே
சாவிகொடுக்கும் பொம்மைகளாய்
மாறிப்போனது அன்னையர் இனம்.

காதல், கண்ணீர்
பாசம், அன்பு
இவையெல்லாம் இலக்குதேடி
பிரபஞ்ச வெளியில்
அலைபாய்ந்துகொண்டிருக்கிறது
நாகரீகம் மட்டும்
நைல் ஆற்றிலேயே
மூழ்கிப்போனது!

– பாஷா

Advertisements
 

என்ன சொல்ல நினைத்தாய்?:

Filed under: கவிதைகள் — bashakavithaigal @ 12:31 பிப

வாழ்வின் திசைகள்
நம் பிரிவை தீர்மானிக்கும்
அந்த இறுதியில்
என்னிடம் என்ன சொல்ல
நினைத்தாய்?

உனக்கும் எனக்கும்
இடையே ஒரு
வெற்றிடம் அமர்ந்து
நமது மௌனங்கள்
கைகோர்க்கும் அந்த
கடைசி நிமிடங்களில்
என்னிடம் என்ன சொல்ல
நினைத்தாய்?

பிரிவுவலி மறைக்க
சிரிப்பு முகமூடியணிந்து
என் எதிர்காலம் பற்றி கேட்ட
உன் சம்பிரதாய கேள்விகளிடையே
என்னிடம் என்ன சொல்ல
நினைத்தாய்?

கடைக்கண்ணால் பார்த்தபடி பேருந்தின்
கடைசிப்படிக்கட்டில் கால்வைக்கும்
கடைசி நிமிடத்தில்
என்னிடம் என்ன சொல்ல
நினைத்தாய்?

நகரும் பேருந்து
ஜன்னல் வெளியே
ஒற்றைப்பார்வை வீசி
உடன் முகம் திருப்பிய
அந்த ஒற்றை நொடியில்
என்னிடம் என்ன சொல்ல
நினைத்தாய்?

– பாஷா

 

அந்த நொடியில்….

Filed under: கவிதைகள் — bashakavithaigal @ 12:30 பிப

என்னுள் நீ

உடைந்து நொறுங்கிய தருணத்தில்

உனக்கான என் உணர்வுகள்

கற்பிழந்துவிட்டிருந்தது.

என் தன்மானத்தின் தலையிலேறி

குத்தி கிழித்து குதறி

கோரதாண்டவமாடியிருந்தாய்.

உனக்காய் உருகிய என் அன்பு

கழிவு பொருளாய்

காற்றில் இரையப்பட்டிருந்தது.

நீ விட்டுப்போன இதயத்தின்

வெறுமை பக்கங்களில்

வெறுப்பு வந்தடைத்திருக்க

இறந்துபோயிருந்தேன்!

பாஷா

 

நிகழாமல்..

Filed under: கவிதைகள் — bashakavithaigal @ 12:26 பிப

உன்னில் விழுந்த அந்த
முதல்கணம் என்னில்
நிகழாமல் போயிருக்கலாம்.

உன் உதடுகளால் நான்
அழைக்கப்படாமலிருந்தால்
எண்ணூறு தூக்கமற்ற இரவுகள்
ஏக்கத்திலேயே தொலைந்த என்
நொடிகள் எல்லாம்
படைப்பாக மாறியிருக்கலாம்.

ஆலயம் ஆலயமாக ஏறியிறங்கிய
என் பிரார்த்தனையில்
ஒருமுறையேனும் உன் பெயர் விடுத்து
என்பெயர் உச்சரிக்கப்பட்டிருந்தால்
என்இருப்பின் பொருட்டு நீயில்லையென்று
எல்லாம் வல்லவன் என்னிடம் சொல்லியிருக்கலாம்.

என் தொலைபேசி அழைப்பு
உன்னால் புறக்கணிக்கபடாமலிருந்தால்
உன் நினைவு சூன்யத்தில்
சுழன்றுவரும் என் பகல்பொழுது
பசித்து பிச்சையெடுக்கும்
கூன் விழுந்த கிழவனின் கேவலுக்கு
காதுகொடுத்திருக்கலாம்.

செவிடனாக நான் நிந்திக்கப்பட்டிருந்தால்
உன்குரலொலித்த நொடியில்
என்னிடமிருந்து பிரிந்து
ஏதோவொன்று உன்னிடம்
உறையும் ஒவ்வொரு முறையும்
செயலிழந்து சிந்தனை தொலைத்து
செத்துப்போகமாலிருந்திருக்கலாம்

உன்னில் விழுந்த அந்த
முதல்கணம் என்னில்
நிகழாமலேயே போயிருந்திருக்கலாம்.

 பாஷா

 

விட்டுசெல் திசெம்பர் 19, 2006

Filed under: கவிதைகள் — bashakavithaigal @ 10:36 முப

நீ
மீண்டும் மீண்டும்
புறம் தள்ளியபோதும்
பள்ளம் நோக்கி
பாயும் நதியாய்
உன்னிடத்தில் மட்டுமே
வாசம் செய்ய
என் அன்பு வருகிறது!

நீ
துயருற்ற தருணங்களில் பல்கிபெருகி
திசையாவும் கரம் நீட்டி
தூக்கிசெல்கிறது என்னை உன்னில்!
உறக்கம்கலைக்கும் காலையிலேயே
இரக்கமின்றி என்னை
உன் நினைவு சிறையில்தள்ளும் என் அன்பு
நோயில் நீ துடிக்க
இயலாமையின் வெளிப்பாடாய்
கண்ணீர் மறைத்து
கடவுளிடம் கையேந்தி நிற்கிறது!

குரங்கு கூட்டத்திடையே
கோழிகுஞ்சாய் என் அன்பு
உன்னில் தனித்திருப்பதில்
உடன்பாடு எனக்கில்லை
ஒரு சாயந்திர தனிமையில்
விட்டு எனைசெல்லுமுன் என் இதயத்தில்
வெட்டிவைத்திருக்கும் சவக்குழியில்
என் அன்பை விட்டுசெல்!

 பாஷா

 

காதலிப்பதெப்படி? திசெம்பர் 13, 2006

Filed under: கவிதைகள் — bashakavithaigal @ 2:51 பிப

உனக்காக காத்திருக்கும்
ஒரு மணி நேர இடைவெளியில்
உலக சொற்பழிவாற்றிவிடுகிறேன்
உன்னிடம்.
ஆனால்….
உன்னை பார்த்த கணத்தில்
ஒட்டிக்கொள்ளும் உதடுகள்
வார்த்தைகளை உதிர்க்க
மறுக்கிறது.
உன் பார்வையால்
வெட்கப்போர்வை போர்த்தி
என் வார்த்தைகளை
கைது செய்துவிடுகிறாய்

நீ சொல்லி விட்டுவிட
சில கெட்டபழக்கங்களை
உடன்வைத்திருக்கிறேன்
ஆனால் நீயோ
என் நெற்றி மோதி
என் சிகரெட் சுவாசம்
சுகமென்கிறாய்
குடித்துவிட்டு நான் செய்யும்
கோமாளித்தனங்களை ரசித்து
சிரிக்கிறாய்

நான் விளித்து
நீ திரும்பி பார்க்கும்
அழகை இரசிக்க நினைத்தேன்.
நீயோ
நாம் சேர்ந்திருக்கும் பொழுதில்
உன் பார்வையை
என்னிடமிருந்து அகற்றுவதில்லை.
பிரிந்திருக்கும் பொழுதில் எனக்கு
பிடித்தமானவர்களிடமோ பிடித்தமானவைகளிடமோ
என்னை தேடியெடுத்துகொள்கிறாய்!

உன்னுடன் சண்டையிட்டு
பின் கெஞ்சும்
சிறு ஆசையைகூட
நிறைவேற்றபோவதில்லை நீ
எனது மொழியை மட்டும் பேசுகிறாய்
அடிக்கடி முட்டிக்கொள்வது
நமது நுனி மூக்குமட்டுமல்ல
நமது வாக்கியங்களும்தான்!

நீயிப்படி இருந்தால்
நானெப்படி
காதல் செய்வேன்!

– பாஷா

 

காத்திருப்பேன் காதலா திசெம்பர் 12, 2006

Filed under: கவிதைகள் — bashakavithaigal @ 2:06 பிப

என்னைச்சுற்றி நீ
விட்டுப்போன கேள்விகள்
நீயில்லாத வெற்று நிமிடங்களை
சுமந்துகொண்டு சூன்யவெளியில்
அலைந்திருக்கும்!

கனவில் வந்து
கன்னம் வருடிப்போகும்
உன் உள்ளங்கை உரசலை
இனி யாரிடம் சொல்வேன்!

மறுபிறவி நம்பியவளில்லை
உன்னை மறுக்கும்வரை
இன்று சொல்கிறேன்
இந்த பிறவியுடன்
இனியென் உடன் நீ
வரும் பிறவிகள் ஏராளம்!

இனிஒரு பிறவியில்
உன் மதத்தில்
உன் குலத்தில்
உன் பிரிவில்
உன் முறையாக
பிறக்கும் ஒரு நாளில்
பிறந்த என் காதல் சொல்வேன்
அதுவரை
இறந்துகிடக்கட்டும்
சொல்லப்படாத என் காதல்
முற்றுபெறாத இந்த கவிதையுடன்!

பாஷா