தடங்கள்

நாம் பிரிகிறோம் பிப்ரவரி 19, 2007

Filed under: bashakavithaigal — bashakavithaigal @ 8:16 பிப

நாம் பிரிகிறோம்.
நின்று, நடந்து
நெகிழ்ந்த நிமிடங்களை விட்டு
நெடும் தூரமாய்
நாம் பிரிகிறோம்.

கல்லறை அமைதியில்
கண்ணீர் கட்டும்
கணப் பொழுதுகளில்
நெஞ்சு பிளக்கும் வேதனையில்
நம் சவங்களை புதைத்து
நாம் பிரிகிறோம்.

தங்கைகளுக்கு அக்காவென்றோ
குடும்பபாரம் சுமக்கப்போகும்
தந்தையிழந்த தனயனென்றோ
அடுக்கி வைத்து காரணங்களால்
இடைவெளி நிரப்பி
நாம் பிரிகிறோம்.

பிறிதொரு நாள்.
நினைவுகளை நெஞ்சில் புதைத்து
நெருப்பில் நீ புகையாய் விண்ணுக்கும்,
கடைசி மூச்சில்
கண்களில் உன் முகம் தேக்கி
நான் புதையுண்டு மண்ணுக்கும்,
நாம் பிரிகிறோம்.

Advertisements
 

கடைசி துளி

Filed under: bashakavithaigal — bashakavithaigal @ 8:16 பிப

மெல்லியதாய் மௌனத்தை
துளைத்துவிழும் மழை சாரலின்
பிந்தின ஜாமத்தில்
விந்தின் துளியொன்று
கை கால் முளைத்து
கட்டிலின் காலமர்ந்து
பாலூட்டுகின்றது!

மங்கலாய் எரியும்
மஞ்சள் விளக்கில் தெரியுமிந்த
நான்கு சுவர்களுக்கு
நான் சொல்லிய
கதைகள் ஏராளம்!
கதையின் நாயகர்களை
காணக் கிடைத்த
சுவர்களின் கண்களில்
சளியும் எச்சிலும்!

மனித ஒலிகள் மறந்து
நொடி முள்ளின் மொழியறிந்த
என் தனிமையின் காதுகளில்
காடு அனுப்ப
கூப்பாடு போடும் அவல ஒலிகள்!

“ம்ம்ம்ம்ம்……
கருப்பையில் காத்தீர்களே
கட்டிலில் கட்டிய
கணவனென அணைத்தீர்களே
கொட்டிக் கொடுத்தான்
என் அப்பனென கூக்குரலிட்டீர்களே
காடு செல்லுமுன் உங்களுக்காய்
என் கன்னத்தில்
கடைசி துளி!

 

தேவதை உறக்கம்

Filed under: bashakavithaigal — bashakavithaigal @ 8:14 பிப

நட்சத்திர தோழர்களுடன்
நிலவு ஜன்னல் வழி பார்க்கும்
நிசப்த இரவில் ஒரு
தேவதை உறக்கம்
என் படுக்கையெங்கும்
பரவி கிடக்கிறது!

பிரபஞ்ச சாளரங்களை
துளைத்து வந்து
இமை ஊடுருவி அதன்
உள்ளுக்குள் உறைந்திருக்கிறது
ஒரு தேவ அமைதி!

மழைக்கால சிலிர்ப்பாய்
தோன்றி மறையும்
உதட்டு புன்னகையுடன்
“போடா…”வென்ற செல்ல சிணுங்கல்கள்
உறக்கத்தின் படைப்பாய் ஒரு
தேவதை கனவு!

மெல்ல தலைகோத
கருவறையில் இருக்கும்
குழந்தையாய் என்
மார்பு கூட்டுக்கிடையில்
மடங்கி கிடக்கிறது!

மலர்ந்து சிரிக்கும்போது மட்டுமல்ல
மஞ்சத்தில் உறங்கும்போதும்
மலர் அழகே!

 

எது அது

Filed under: bashakavithaigal — bashakavithaigal @ 8:14 பிப

ஒரு முதல் புன்னகையின்
அலை நீளத்தில்
இரு கண்கள் கவிழ்த்த
கூடாரத்தினுள் கோழிகுஞ்சாய்
மனம் சிக்கிகொண்ட
ஒரு பிற்பகலை நம்மிடம்
எடுத்து வந்தது
எது அது!

இரு விரல் உரசி
இரு தோள் உரசி
உன்னருகில் அமர
ஒரு வேண்டுகோளாய் என்
தைரியம் தரையிறங்கியபோது
ஒற்றை பார்வையால்
என்மேல் ஒட்ட வைத்தாயே
எது அது!

தோழனாய், தமயனாய்
தொடரும் பயணத்தில்
துணைவனாய்
உன் கருவறையில் சூல்கொண்டு
பின்னொரு நாளில் நீ மடிதாலாட்டும்
தலை மகனாய்
எல்லா விருப்பத்திலும் உன்
அருகாமை விரும்பும்
எனக்குள் இருக்கும்
எது அது!

 

மரண வாக்குமூலம்

Filed under: bashakavithaigal — bashakavithaigal @ 8:13 பிப

என் கதவுகளை உடைத்து
உன்னை நோக்கி
என்னில் அடைத்து வைத்திருக்கும்
உன் சித்திர கலவைகள் சிதறுகிறதே
சேகரித்தாயா?

என் வறண்ட பாலைவனத்தில்
உன் காதல் நீருக்காய்
அலைபாய்ந்த என் ஆசைகளை
பிச்சைக்கார குரலின் நிராகரிப்பாய்
நீ தூக்கி ஏறிந்த நிமிடங்களை
என் கடிகாரத்தில் நான்
காணவேயில்லை.
கண்டாயா?

என்
இதயம் முழுவதும் உன் பெயர் நிரப்பியிருந்தும்
இது ஒரு விபத்தென்றே என்னால்
பொய் சொல்ல முடிகிறது
என்ன செய்வது….
எரிந்த நிலையிலும் என்னால் உன்னை
வெறுக்க முடியவில்லை!

 

குகை வாழ்க்கை

Filed under: bashakavithaigal — bashakavithaigal @ 8:13 பிப

குகையை கூடு எனக்கொள்ளுமோ
கிளையாட்டும் பறவைகள்
“குகையை கூடு எனக்கொள்ளுமோ
கிளையாட்டும் பறவைகள்”
குகையின் கேலியாய்
எதிரொளிக்கிறது எங்கெங்கும்
கூனாகி குனிந்து இருட்டினுள்
குறுக்கிக்கொள்கிறேன்!

குகை புகுவாய்
கொண்டாடி மகிழ்வாய்
வாழ்த்தொலிகள் முழங்க
எந்தையும் தாயும்
மகிழ்ந்திருந்ததாய் சொன்ன
குகைபுகுந்தேன் ஒரு நாள்

குகையின் சுவரெல்லாம்
விந்துக் கறைகள்
முத்தத்தின் ஒழுகலில்
வழியும் எச்சில்கள்
இதில் எழுதப்போவதில்லை
என் சரித்திரத்தை
வெள்ளைத் தாளொன்றுண்டு என்னிடம்
குகையிருட்டை கையள்ளி
எழுதுகோலை நிரப்புகிறேன்
எழுதும் முனையில்
எதுவும் இல்லை
விரலில் எடுத்து
விந்து பீய்ச்சி
வெள்ளைத் தாளில் எழுதுகிறேன்
பின்னொரு நாள் குகைபுகும்
யாரேனும் படிக்க கூடும்!

குகையின் வாயிலில்
சாரல் விழுகிறது
சிறகை நனைத்து
சிலிர்த்து குகை
விளையாட்டில்!
குகை வாழ்க்கைக்கு
சிறகு வேண்டுமா
குகை தத்துவம்!
உரக்க சொல்லி
உயர பறக்க எத்தனித்து
சுவர் மோதி தரைதொடுகிறேன்
பறத்தல் கூடாது
குகை விதிகள்!
பறவையென்றே சொல்லத்தான்
இறகுதிரும் சிறகுகள்!

அகன்ற வானமும்
ஆழ் பள்ளத்தாக்கும் மோதும்
குகை மறுமுனை நோக்கி
மெல்ல நடக்கிறேன்
சுவாசிக்க வேண்டும்
சிறகடிக்க பறக்க வேண்டும்.
குகையை கூடு எனக்கொள்ளுமோ
கிளையாட்டும் பறவைகள்!

 

எனது இருப்பு

Filed under: bashakavithaigal — bashakavithaigal @ 8:12 பிப

செங்கல் சுண்ணாம்பு நிரப்பி
காகித கற்றைகளில் என்
பெயர் பரப்பி
உறவு அழைத்து ஒரு
விருந்தில் அதன் பெருமை சொல்லி
வீடு என்று கொண்டாடும்
இது உள்ளே ஒளிந்திருக்கிறதா
எனது இருப்பு!

ஒரு
மழை மாலையில்
மல்லிகை மணத்தில் அவள்
இதழ்வழி சொட்டும் நீர் என்
இமை நுனி தெறிக்க
எல்லாம் இவளேயென
தலை சாய்த்திருந்த
அவள் மடியிலிருக்கிறதா
எனது இருப்பு!

என்
கனவுகளையும் ஆசைகளையும்
விந்து துளியாய் கருவறையில் விதைத்து
நீரூற்றி பின்
நெடும் தொலைவிலிருந்து
தொலைபேசியில் வரும் குரலில்
வாழ்ந்து கொண்டிருக்கும்
அந்த பிம்பத்திடமா இருக்கிறது
எனது இருப்பு!

நீண்ட நெடிய கால கணக்கின்
இறுதி விடை கிடைக்கும் நொடியில்
கருமேகங்களுக்குள் ஒளியும் நட்சத்திரங்களாய்
காணாமல் போகிறது
எனது இருப்பு!

பின்னொரு நாளில் என்
சவக் குழியில்
ஓலை பாய்க்கும்
மூங்கில் கழிகளுக்குமான
வெற்றிடத்தை அது
நிரப்பக் கூடும்.