தடங்கள்

நாம் பிரிகிறோம் பிப்ரவரி 19, 2007

Filed under: bashakavithaigal — bashakavithaigal @ 8:11 பிப

நாம் பிரிகிறோம்.
நின்று, நடந்து
நெகிழ்ந்த நிமிடங்களை விட்டு
நெடும் தூரமாய்
நாம் பிரிகிறோம்.

கல்லறை அமைதியில்
கண்ணீர் கட்டும்
கணப் பொழுதுகளில்
நெஞ்சு பிளக்கும் வேதனையில்
நம் சவங்களை புதைத்து
நாம் பிரிகிறோம்.

தங்கைகளுக்கு அக்காவென்றோ
குடும்பபாரம் சுமக்கப்போகும்
தந்தையிழந்த தனயனென்றோ
அடுக்கி வைத்து காரணங்களால்
இடைவெளி நிரப்பி
நாம் பிரிகிறோம்.

பிறிதொரு நாள்.
நினைவுகளை நெஞ்சில் புதைத்து
நெருப்பில் நீ புகையாய் விண்ணுக்கும்,
கடைசி மூச்சில்
கண்களில் உன் முகம் தேக்கி
நான் புதையுண்டு மண்ணுக்கும்,
நாம் பிரிகிறோம்.

Advertisements
 

காதல் பிப்ரவரி 14, 2007

Filed under: bashakavithaigal — bashakavithaigal @ 9:41 பிப

கோபமாய்,கெஞ்சலாய்
அழுகையாய்,ஆத்திரமாய்
உன்னிடம் கொட்டிவிடத்தவிக்குது
என்னில் நீ நிரைத்து
வைத்த காதல்!

 

நீ இல்லாத நான்

Filed under: bashakavithaigal — bashakavithaigal @ 9:41 பிப

அந்திம நாட்களின்
இருண்ட இரவுகளோ இவை ?
உன்சுவடுகள் வருடாமல்,
மூன்று இரவுகள் நினைவுதப்பி
கருந்துளையில் காணாமல்போய்விட்டது.

உன்குரல் எழுப்பாமல்
என் தொலைபேசி
உறக்கத்திலேயே உயிர்துறந்துவிட்டது
பூஜையறை,சமையலறை
இவற்றுடன் என்
உயிரிலும் ஒரு
வெற்றிடத்தை விதைத்துவிட்டாய்.

இப்பொழுதெல்லாம் எழுதும்
என்கவிதைகளை கிழித்தெறிகிறேன்
உன்பிரியத்தை எனக்கல்ல,
என்கவிதைக்கே கொடுத்தாயென்ற
பொறாமையால்….

கடல்நடுவில் மிதக்கும்கட்டையில்
தனித்துவிடப்பட்ட குழந்தையாய்
கதறியழுகிறேன்!
வேலைபளு கொண்டவனாய்
வேதனை புதைக்க
வேடம்தரித்து திரிகிறேன்
இதயம்பிளக்கும் வேதனையை நீ
இல்லாத வெறுமைக்கு
சொல்லிகொண்டிருக்கிறேன்!

 

நிகழ்வுகள்

Filed under: bashakavithaigal — bashakavithaigal @ 9:40 பிப

சில சொற்களால்
சில நிகழ்வுகள்
நித்தம் நடந்தேறிகொண்டிருக்கிறது
சொற்கள் சம்பிரதாயமாக
தெளிக்கப்பட்டபோதும்….

உணர்வுகள் உள்ளத்தில் புதைந்து
உதடுகள் வார்த்தைகள்
ஒப்பிக்கும் இயந்திரங்களாய்
மாறிப்போனது.

சமூக பார்வையாளர்களின்
ஜன்னல்வழி காட்சிக்காக
நித்தம் ஒரு
நாடகம் நடந்தேறிகொண்டிருக்கிறது.

கல்யாணமென்றே வழிப்போக்கர்களின் வாழ்க்கை
குப்பை காகிதத்தில்
கோட்பாடுகளாக நிரப்பபடுகிறது.

சகித்துகொள்வேனென்றே
சாவிகொடுக்கும் பொம்மைகளாய்
மாறிப்போனது அன்னையர் இனம்

காதல்,கண்ணீர்
பாசம்,அன்பு
இவையெல்லாம் இலக்குதேடி
பிரபஞ்ச வெளியில்
அலைபாய்ந்துகொண்டிருக்கிறது
நாகரீகம் மட்டும்
நைல் ஆற்றிலேயே
மூழ்கிப்போனது!

 

கல்லறை பாடல்

Filed under: bashakavithaigal — bashakavithaigal @ 9:40 பிப

உனக்காக என்
உணர்வுக் கருவறையில்
உற்பத்தியாகும் வார்த்தைகளுக்கு
ஒரே முகம்தான்.
வார்த்தைகளை கோர்த்து
வாக்கியம் உருவாக்கும்
உணர்வுகளை உனக்குள்
தேடிக்கொள் தேவையெனில்
உன்னால் ஜனித்த நாளன்று
எனக்குள் உதித்த உன் உணர்வுகள்
என் கல்லறையையும்
அதன் கருவறையாக்கி
உனக்கான என் பாடலை
பிரசவித்துகொண்டிருக்கும்
ஒற்றை ரோஜாவுடன்
ஒரு நாள் வந்து
என் கல்லறை பாடலை
காதால் கேட்டு செல்!

 

இனம்

Filed under: bashakavithaigal — bashakavithaigal @ 9:39 பிப

பூங்காவிலிருந்த பூவொன்று
புயல்காற்றில் எடுத்தெறியப்பட்டு
என்மடி சேர்ந்தது

எடுத்தெறியப்பட்ட பூ
எனக்கென்று நானிருக்க
வாடும் பூ
வீடு தேடியது

வீடும்தேடும் பூ
வீசியெறியும் கண்ணீர்துளிகள்
உயிர்வேர்வரை சென்று எரித்ததால்
பிரிய பூவை மீண்டும்
பூங்காவிட்டு வந்தேன்

பின்னொரு நாள்….
பூங்காவழி செல்லும்போது
மரபுவேலி பின்னாலிருந்து
மற்ற பூக்களோடு சிரித்திருக்கும்
என் பிரிய பூவை பார்க்கிறேன்
என் உதடு முணுமுணுக்கிறது
‘பூங்காவிலிருக்க நானொன்றும் பூவில்லையே! ‘

—-
sikkandarbasha@hotmail.com

 

மயானம்

Filed under: bashakavithaigal — bashakavithaigal @ 9:39 பிப

அது ஒரு தனி உலகம்
அலைபாயும் காற்றில்
நிபந்தனைகளற்ற அன்பு
தொட்டில்கட்டி ஆடுமிடம்!
ஆரம்பத்தின் பிறப்பிடம் அந்த சாம்பல்மேடு
அர்த்தநாரீஸ்வரன் ஆடும் காடு
ஆணவம் தொலைப்பவர் வீடு!

திருவாசகம் பாடும்
மாணிக்கவாசகர்களும்
தெருகல்லென தூற்றும்
நாத்திக நீசர்களும்
நித்திரைகொள்ளுமிடம்!

குடுமிகொண்ட மண்டையோடும்
குருதிதொலைத்த பிண்டமும்
கணக்கில்லா உடல் எச்சங்களும்
கூடிக்கிடக்கும் ஒரே
குலமிலா உலகது!

காதலாய்,கண்ணீராய்
அவமதிப்பாய்,அன்பாய்
தெளிக்கப்படும் வார்த்தை கலைந்து
ஆபாச நகர இரைச்சல்களுக்கிடையே
அமைதி சொல்லும்
மயான பூமியின்
துருப்பிடித்த கதவு திறந்து
விருப்பி வாருங்கள் தனியனாக
ஒருமுறையேனும்!