இப்பொழுது தெரிந்ததா….தெரிந்ததா…..வீட்டு வாடகை உயர்ந்ததுக்கு காரணம்,விலைவாசி உயர்ந்ததுக்கு காரணம்…அதுக்கு காரணம்….இதுக்கு காரணம் கடைசியில் உங்கள் காலை கடன் செலுத்த முடியாததற்கு காரணம் வரை அடுக்கி அந்த அப்பாவி மென்பொருள் துறையினரை குற்றம் சாட்டினீர்களே இப்போது தெரிந்தததா அவர்கள் தங்க சித்திரவதை கூடத்தில் கொத்தடிமை கூலிகள் என்று.அவர்களுக்கு எல்லாம் நீங்கள் நினைப்பது போல் வாழ்க்கை மலர் பாதையை அமைத்து தரவில்லை. இழப்பதற்கு அவர்கள் தெரிந்தோ தெரியாமலோ தயாராக இருந்தார்கள். எளிய உதாரணம் காலை சூரியன்,அல்லது நட்சத்திரத்தை கடைசியாக எப்பொழுது பார்த்தீர்கள் என்று அவர்களை கேளுங்கள் மலங்க மலங்க முழிப்பார்கள்.அதுதான் அவர்கள் வாழ்க்கை எப்போதும்.
இப்பொழுதுதான் அவர்களின் தற்கொலை செய்தி தலைப்பு செய்தியாயிருக்க வேண்டும்.இதற்கு முன்பும் இப்படி நிகழ்ந்திருக்கிறது ஆனால் அப்போது அவை செய்தியாக்கப்பட்டதில்லை. நல்லா உங்களுக்கு வேணும்டா என்று நீங்கள் ஆனந்தபடும் நேரத்தில் அவர்கள் இப்போது என்ன செய்துகொண்டிருக்கிறார்கள் என்று பார்ப்போம்.
கேம்பஸில் அல்லது ஒப்பன் இண்டர்வியுவில் கிடைத்து கலர் கனவுகளோடு வேலைக்கு செல்ல காத்திருப்போர்,அமெரிக்க கனவுகளோடு எம்பஸி வாசலில் காத்து இருப்போர்,பத்து ஆபர்களுடன் அடுத்த வேலைக்கு எக்கச்சக்க சம்பள உயர்வுடன் இருப்போர்,டாலரில்,பவுண்டில்,திர்ஹாமில் சம்பாதித்து கிட்டத்தட்ட இந்திய வாழ்க்கையை மறந்தோர் என பல வர்க்கங்களாக இருந்த இந்த இனம் இன்று
1) வேலை தேடுபவர்
2) வேலை இழந்து விரக்தியின் விளிம்பிலிருப்பவர்
3) வேலை இழப்பு எப்போது வேண்டுமானாலும் நேரலாம் என்ற நிலையிலிருப்போர் என்ற நிலையில் சுருங்கி விட்டது.
இவர்களில் பலர் வீட்டுக்கடன்,கார் கடன்,கல்வி கடன்,இதர பல கடன்களை வாங்கி கடன்காரர்களாக திணிக்கப்பட்ட கார்ப்பரேட் கலாச்சாரத்தின் பலி கடாக்களாக அலைந்துகொண்டிருக்கிறார்கள்.
இன்று பணி நீக்கம் செய்ய பல குறுக்கு உபயாங்களை நிறுவனங்கள் கையாள ஆரம்பித்துவிட்டன.பத்து நபர்கள் பார்க்கும் வேலையை ஒருவருக்கு தந்து ஒரு மாத பணியை இரண்டு நாளில் முடிக்க சொல்வது,என்ன செய்வது என்று சொல்லாமலேயே(உதாரணமாக வெற்று காகிதத்தை கொடுத்து) இதில் இருப்பதையெல்லாம் முடித்து கொடுக்க சொல்வது,ரேட்டிங் என்று கொடுக்கப்படும் வருடாந்திர நிகழ்வுகளில் இந்த வருடம் யாருக்கும் முதல் ராங்க் இல்லை என்று முடிவு கட்டுவது இன்னும் மோசமாக காஸ்ட் கட்டிங் என்ற பெயரில் 7 மணிக்கு மேல் ஏசியை நிறுத்துவது,லிப்ட்டை நிறுத்துவது,கழிப்பறை காகிதங்களை முடக்குவது என்று போய்கொண்டிருக்கிறது.
மேற்சொன்ன செயல்களால் மென்பொருள் துறையை துறக்க பலர் தயாராகி வருகிறார்கள்.குறிப்பாக அரசாங்க சம்பள உயர்வுக்கு பின்னால் சம்பள வித்தியாசம் பெருமளவு குறைந்து விட்டது.பலர் அரசாங்கத்தின் கதவுகளை தட்ட ஆரம்பித்துவிட்டார்கள்.இன்னும் சிலர் வியாபாரம் செய்ய உத்தேசித்துள்ளார்கள்.பெண் வீட்டார் மென்பொருள் துறை என்றாலே காத தூரம் ஓடுகிறார்கள்.
மாற்றம்தான் வாழ்க்கை.மாறுவதற்கு தயாராக இருப்பவர்கள்தான் தாக்குபிடிக்கிறார்கள்.
ஆதலால்
1) பணி நீக்கம் செய்யப்பட்டால் உங்களை குறைத்து மதிப்பிட்டுகொள்ளாதீர்கள். உங்கள் ஆற்றலுக்கு அந்த நிறுவனம் ஏற்றதல்ல என்று முடிவு செய்யுங்கள்.
2) நண்பர்கள் உறவினர்களை பார்த்து நடுங்க தேவையில்லை.சாப்ட்வேர் துறையில் இதெல்லாம் சகஜமப்பா என்று நகைச்சுவையாய் சொல்லி விடுங்கள்.
3)சிக்கன நடவடிக்கையை கையாண்டு பெற்றோர்களின் ,உறவினர்களின், நண்பர்களின் உதவியை கூச்சமில்லாமல் ஏற்றுகொள்ளுங்கள். நமது சமூக அமைப்பு நம்மை காப்பாற்றும்
4)உடல் நலனை பேணுங்கள் விட்டு போன தனிப்பட்ட வேலையை முடியுங்கள்
5) அடுத்து என்ன செய்யலாம் என்று ஆலோசனை செய்யுங்கள் இக்கட்டான சூழலில் மீண்டு வருபவரே சாதனையாளர்
மறுபடி பொருளாதாரம் முன்னேறும் நிலையில் மென்பொருள் துறைக்கு ஆள் பற்றாக்குறை ஏற்படும். கசப்பான அனுபவங்களால் பலர் இத்துறைக்கு திரும்ப வர தயாராக இருக்க மாட்டார்கள்.இப்பொழுது செய்யும் செயல்களுக்கு மென்பொருள் நிறுவனங்கள் அதற்கான பலனை அடைந்தே தீரும்.2001 ல் இச்செயல்களை செய்த நிறுவனங்கள் பெருமளவு பின்னர் அடையாளம் தெரியாமல் அழிந்துவிட்டது.வரலாறு மிக முக்கியம் மங்குனி பாண்டிகளே!!!!!!!