மென்பொருள் துறையென்றாலே கை நிறைய சம்பளம்,கலக்கலான வாழ்க்கை,வெளிநாட்டு வேலை வாய்ப்பு என்று எல்லோராலும் நம்பப்படுகிறது.அதில் மூன்றாவதான இந்த வெளிநாட்டு வேலை வாய்ப்பு நிஜங்களை தரிசிப்போம். உங்களுக்காக வேலை செய்கிறோம் எனக்கொரு வாய்ப்பை கொடுங்கள் என்று நமக்காகவே உழைக்க துடிக்கும்(!!!!!!!!) அரசியல்வாதியை நம்புகிறீர்களா அப்படியானால் எனக்கொரு வாய்ப்பு கொடுங்கள் என்று அன்பாக,வெளி நாட்டு வேலை வாய்ப்பு இல்லையென்றால் இராஜினமா என்று அராஜகமாக கேட்கும் மென்பொருள் துறை நிபுணர்களையும் நம்பிதானாக வேண்டும்.இது இந்திய கம்பெனிகள் மூலம் செல்லுபவர்கள். கன்சல்டென்ட் எனப்படும் ஆட்கள் மூலம் போகும் கூட்டம் ஒரு பக்கம்.
டாலர் கனவு … இது மட்டுமே கணக்கு.
பெரும்பாலான வேலை வாய்ப்புகள் அமெரிக்கா சார்ந்தவை. முதலில் B1,H1B,L1 tஹிஉச் இது மாதிரி ஏதாவது ஒரு விசா வாங்க வேண்டும். அதை வாங்க சென்னையின் பட்ட பகல் வெயிலில் கோட்டு,டை எல்லாம் போட்டு நீள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்மான வரிசையில் கோமாளி மாதிரி நின்று உள்ளே சென்று மனப்பாடம் செய்து வைத்த பதில்களை கடகடவென ஒப்பிக்க வேண்டும். சிறிது இடறினாலும் விசா நிராகரிக்கப்படும்.
விசா வாங்கியாகி விட்டது. இப்பொழுது பறக்க தயார். டிக்கெட் எடுப்பதற்கு என்றே தனி துறை பெரும்பாலான நிறுவனங்களில் இயங்கும். அவர்கள் பணியே பல ஆராய்ச்சிகள் செய்து மிகவும் குறைந்த விலையிலான டிக்கெட் எடுத்து உங்களை அனுப்புவது. கொஞ்சம் உஷாராக இல்லையென்றால் கட்டை வண்டியிலும் உங்களை அனுப்பி விடுவார்கள். உதாரணத்திற்கு மதுரையிலிருந்து சென்னைக்கு விமானத்தில் செல்ல பயண சீட்டு கேட்பதாக கொள்வோம். ம்துரை >>>>>> கொச்சி
கொச்சி >>>>>> கோயம்புத்தூர்
கோயம்புத்தூர் >>>>> கொல்கத்தா
கொல்கத்தா >>>>> சென்னை
என்று மாறி மாறி பயணம் செய்ய டிக்கெட் எடுத்து தருவார்கள். என்ன தலை சுற்றுகிறதா? இந்த சுற்று சுற்றினாம் தலை சுற்றாமல் என்ன செய்யும்? இந்தியாவுக்குள்ளேயே இந்த மாதிரி சுற்ற தலை சுற்றுகிறதென்றால் உலகம் முழுவதும் சுற்றி அமெரிக்கா செல்ல? அமெரிக்க பயணம் செய்பவர்கள் பெரும்பாலும் ஆசியா அரேபிய ஐரோப்பிய அமெரிக்க கண்டங்களை கடக்க வேண்டியிருக்கும். ஆப்பிரிக்க,ஆஸ்திரேலிய கண்டங்களை விட்டுவிட்டார்களா என்ன? நல்ல வேளையாக ஆர்ட்டிக் கண்டத்தில் சர்வதேச விமான நிலையம் இருப்பதாக தெரியவில்லை.
இப்படியாக உலகம் சுற்றி டாலர் தேசம் எட்டி விட்டீர்கள். இந்திய கம்பெனிகள் மூலம் இங்கு வாங்கும் சம்பளமென்னமோ இந்தியாவில் வாங்கும் சம்பளத்தை விட இரு மடங்குக்கும் மேல்தான். ஆனால் செலவு போக சேமிப்பு? சில ஆயிரங்களேயென பல நண்பர்கள் சொல்ல கேள்வி. அப்படியானால் அமெரிக்கா ஏன் செல்ல வேண்டும்? இது தவிர பெரும்பாலான இந்திய கணவர்கள் குழந்தை பெற்றுகொள்ள எல்லா வித ஏற்பாடுகளுடன் தங்கள் மனைவியை அழைத்து வருகிறார்கள். அமெரிக்க குடிமகன் அந்தஸ்து கிட்ட. ஒரு உறவினர் திருமண பத்திரிகையில் தங்கள் நல் வ்ரவை விரும்பும் என்று குழந்தை பெயர் போட்டு அடைப்பு குறிக்குள் அமெரிக்கன் என்று குறிப்பு வேறு.
எனக்கு சில கேள்விகள் எழுகிறது. யாரேனும் அமெரிக்க இந்தியர்கள் பதில் தாருங்கள்
1) சில ஆயிர சம்பள வித்தியாசங்களுக்காக நீங்கள் எதையும் இந்தியாவில் இழக்கவில்லை?
2) இந்திய சூழலில் கற்ற இந்தியர்கள் அமெரிக்காவின் பெரும் வேலைகளை செய்யும் திறம் மிக்கவர்களாக இருக்கும்போது குழந்தைக்கு அமெரிக்க குடியுரிமை வாங்க ஏன் இந்த போராட்டம்?
3) பவுண்டு டாலரை விட இரு மடங்கு மதிப்பு மிக்கது,குவைத் பணம் டாலரை விட ஐந்து மடங்கு மதிப்பு மிக்கது. இதையெல்லாம் சம்பாரிக்க அமெரிக்கர்கள் நம்மை போல மெனக்கிடுகிறார்களா?
4)அமெரிக்கர்காவில் டாலர் சம்பாரிக்க செல்லும் நாம் அவர்களிடமிருக்கும் நல்ல பழக்கங்களை இந்தியா வந்தால் கடை பிடிக்கிறோமா? உதாரணம் வழிப்போக்கர்களாக இருந்தாலும் செய்யும் ஒரு சிறு புன்னகை.
5)மனைவி மக்கள் கூட இருக்கிறார்கள் வேறு என்ன வேண்டும் என்பவர்களுக்கு மனைவி மக்கள் என்ற சிறு வட்டத்துக்குள் வாழ்க்கை சுருண்டு விட்டதா?